கடந்த 20 ஆண்டுகளில் இருந்த கேப்டன்களில் சிறந்த கேப்டன்களை சொல்ல வேண்டுமானால் முதல் இரண்டு இடங்களை முக்கியமானவர்கள் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் தான். 

இருவருமே தங்களது கேப்டன்சியின் கீழ் வலுவான அணியை உருவாக்கி வைத்திருந்தவர்கள். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் இருந்தபோது, 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு முறையும் தொடர்ச்சியாக அந்த அணி உலக கோப்பையை வென்றது. 2011 உலக கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணியிடம் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி காலிறுதியில் தோற்று வெளியேறியது. 

உலக கோப்பையை வென்றது மட்டுமல்லாமல் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2003லிருந்து சுமார் 8 முதல் 9 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் கோலோச்சியது. 2003லிருந்து 2010 வரையிலான காலக்கட்டத்தில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது எந்த அணிக்கும் எளிதான காரியம் அல்ல. கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா தான் ஆதிக்கம் செலுத்தியது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறந்து விளங்கும் வலுவான அணியை உருவாக்கி தனது கேப்டன்சியால் ஆஸ்திரேலிய அணியை ஆதிக்கம் செலுத்த வைத்தவர் பாண்டிங். 

2007ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக தோனி ஆனதற்கு பிறகு நிலைமை சற்று மாற தொடங்கியது. இளம் படையுடன் ஆட்டத்தில் ஆக்ரோஷத்தையும் அணுகுமுறையும் நிதானத்தையும் கையாண்ட தோனி, கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியை வலுவாக்கினார். 

டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான சாம்பியன்ஷிப்பையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். இன்றுவரை மூன்றுவிதமான சாம்பியன்ஷிப்பையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி விஸ்வரூபம் எடுத்தது. வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது. வெளிநாடுகளிலும் வெற்றியை குவித்து கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஐபிஎல்லிலும் சென்னை அணிக்கு மூன்றுமுறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார் தோனி. 

இப்படியாக கடந்த 20 ஆண்டுகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன்களான பாண்டிங் மற்றும் தோனி திகழ்ந்துள்ளனர். 

இவர்கள் இருவரின் கேப்டன்சியின் கீழும் ஆடியவர் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸி. ஆஸ்திரேலிய அணியில் பாண்டிங்கின் கேப்டன்சியின் கீழ் ஆடியவர், ஐபிஎல்லில் சென்னை அணிக்காக தோனியின் கேப்டன்சியில் ஆடினார். 

இரண்டு சிறந்த கேப்டன்களுடனும் ஆடியுள்ள ஹஸி, இருவரில் யார் சிறந்தவர் என்ற கடினமான கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஹர்பஜன் சிங்குடனான உரையாடலின்போது, பாண்டிங்கா? தோனியா? என்ற ஹர்பஜனின் கேள்விக்கு இருவருமே சிறந்த கேப்டன்கள் என ஹஸி பதிலளித்தார். 

ஒருவரைத்தான் குறிப்பிட வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியவுடன், நான் இந்தியராக இருந்தால் கண்டிப்பாக தோனியைத்தான் சொல்வேன் என பதிலளித்தார். ஹஸியின் பதிலால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.