இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துள்ளன. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. 

டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. எனினும் இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் இந்த தொடர் மிக முக்கியமானது. ஏனெனில் கடந்த 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர்களை முறையே 4-0 மற்றும் 3-1 என இந்திய அணி இழந்தது. அதேபோல இங்கிலாந்தில் கடந்த காலங்களில் கோலியும் சரியாக ஆடவில்லை. 

எனவே இந்த தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், கடந்தகால மோசமான ரெக்கார்டை உடைக்கும் முனைப்பில் கோலியும் உள்ளனர்.

இந்த தொடரின் முடிவுகளை பொறுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் எந்தமாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதை பார்ப்போம். 

தற்போதைய சூழலில் 125 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும் தலா 106 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்தியாவுடன் மோத உள்ள இங்கிலாந்து அணி 97 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. 

இந்த தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோற்று 5-0 என இங்கிலாந்திடம் தோற்றால் இந்திய அணிக்கு 13 புள்ளிகள் குறையும். ஆனால் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவைவிட 19 புள்ளிகள் அதிகமாக பெற்றிருப்பதால், இந்திய அணியின் முதலிடத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. 

அதேநேரத்தில் இந்திய அணி 5-0 என தொடரை வென்றால், இரண்டாவது இடத்தில் உள்ள அணியை விட 23 புள்ளிகள் முன்னிலையில் முதலிடத்தில் தொடரும். தொடர் டிராவில் முடிந்தால், இந்திய அணிக்கு 5 புள்ளிகள் குறையும்; இங்கிலாந்து அணிக்கு 3 புள்ளிகள் கிடைக்கும். எனவே தொடர் டிராவில் முடிந்தால், புள்ளி பட்டியலில் எந்தவித மாற்றமும் நிகழாது. 

இங்கிலாந்து 3-2 என தொடரை வென்றால், 6 புள்ளிகள் அதிகம் பெற்று இங்கிலாந்து அணி நான்காவது இடத்திற்கு முன்னேறும். இந்தியாவின் முதலிடத்திற்கு பாதிப்பில்லை.

எனவே எந்த வகையில் பார்த்தாலும் இந்திய அணியின் முதலிடத்திற்கு பாதிப்பு கிடையாது. எனினும் ஏற்கனவே 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.