ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் குஜராத் அணி தனது முதல் இன்னிங்ஸில் 92 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்கள் எடுத்தது.
இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 63 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது குஜராத்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 83.5 ஓவர்களில் 228 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக பிருத்வி ஷா 71, சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்கள் எடுத்தனர்.

குஜராத் தரப்பில் ஆர்.பி.சிங், சின்டான் காஜா, ரூஜுல் பட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

2-ஆவது நாளான புதன்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் சமித் கோஹேல் 4 ஓட்டங்களிலும், பி.கே.பன்சால் 6 ஓட்டங்களிலும் வெளியேறினர். இதனால் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத்.

இதையடுத்து பார்கவ் மெராயுடன் இணைந்தார் கேப்டன் பார்த்திவ் படேல். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி, குஜராத்தை சரிவிலிருந்து மீட்டது. அந்த அணி 42.2 ஓவர்களில் 106 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பார்கவ் மெராய் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பார்த்திவ் படேலுடன் இணைந்தார் மன்பிரீத் ஜுனேஜா. அபாரமாக ஆடிய இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 120 ஓட்டங்கள் சேர்த்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பார்த்திவ் படேல் 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் 146 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் இந்த ஓட்டங்களை எடுத்தார்.

இதையடுத்து ரூஜுல் பட் களமிறங்க, மறுமுனையில் வேகமாக விளையாடிய ஜுனேஜா 95 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரூஜுல் பட் 25 ஓட்டங்களில் வெளியேறினார்.

2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி 92 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்கள் குவித்துள்ளது. சிராக் காந்தி 17, ரஷ் கலாரியா 16 ஓட்டங்கடன் களத்தில் உள்ளனர்.

மும்பை தரப்பில் அபிஷேக் நய்யார் 3 விக்கெட்டுகளையும், ஷ்ரதுல் தாக்குர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.