Asianet News TamilAsianet News Tamil

கோலி, ரவி சாஸ்திரிக்கு நெருக்கடி!! கேப்டனாகிறார் அஷ்வின்..?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றதால், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 

ashwin may do captaincy in third test
Author
England, First Published Aug 14, 2018, 4:07 PM IST

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றதால், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் விராட் கோலி மட்டுமாவது நிலைத்து ஆடி சதமடித்தார். ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒருவர் கூட சரியாக ஆடவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் அஷ்வின் மட்டுமே ஓரளவிற்கு நிலைத்து ஆடினார். 

இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை மோசமாக நழுவவிட்டார் தினேஷ் கார்த்திக். இந்த போட்டியில் போராடவே இல்லாமல், இங்கிலாந்து பவுலர்களிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் சரணடைந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

கொஞ்சம் கூட போராடாமல் இங்கிலாந்திற்கு எளிமையாக வெற்றியை பரிசளித்ததை பல முன்னாள் வீரர்களும் விமர்சித்துள்ளனர். லார்ட்ஸ் டெஸ்டின் படுதோல்வியால் கேப்டன் கோலிக்கும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. 

இருவருக்கும் அணி தேர்விலிருந்து அனைத்திலும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் போட்டியில் புஜாராவை சேர்க்காதது, இரண்டாவது போட்டியில் தவானை நீக்கியது, குல்தீப் யாதவை சேர்த்தது என அடுக்கடுக்காக அணி தேர்வு குறித்த விமர்சனங்கள் எழுந்தன. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தபோது, போட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லை என்று அணி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் போட்டிகளுக்கு இடையே தேவையான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே லார்ட்ஸ் போட்டியின் தோல்வி குறித்தும் அடுத்த போட்டிகளை வெல்வதற்கு வகுத்துள்ள உத்திகள் தொடர்பாகவும் கோலியையும் ரவி சாஸ்திரியையும் அழைத்து பிசிசிஐ விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த தொடரை இழக்கும் பட்சத்தில் இருவருக்கும் அளிக்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே முதுகுவலியால் அவதிப்படும் கோலி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. ஒருவேளை கோலி ஆடாதபட்சத்தில், துணை கேப்டன் ரஹானே கேப்டனாக செயல்படுவாரா என்றால் அதுவும் இல்லை என்கிறது பிசிசிஐ வட்டாரம். ரஹானே ஃபார்மில் இல்லாததாலும் அவர் சரியாக ஆடாததாலும், கேப்டனாக செயல்படும் வாய்ப்பு ரஹானேவிற்கு கிடைக்க வாய்ப்பில்லை எனவும் அஷ்வின் கேப்டனாக்கப்படலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

முதல் இரண்டு போட்டிகளிலும் நன்றாக ஆடிய அஷ்வின், அனுபவம் வாய்ந்த வீரர். எனவே அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios