தசுன் ஷனாகா உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்: வேறு கேப்டன் யார்? ஆசிய கோப்பை vs உலகக் கோப்பை!
இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் மூலமாக இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு அணியாக அங்கம் வகித்தது. அதன் பிறகு ஆசிய கோப்பையில் விளையாடியது. இதில், இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு ஷனாகா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
England vs Afghanistan: வெற்றிக்காக போராடும் ஆப்கானிஸ்தான் – டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்!
இதையடுத்து தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அதன் பிறகு விளையாடிய இலங்கை 326 ரன்கள் மட்டுமே எடுத்து 102 ரன்களில் தோல்வியை தழுவியது.
இதைத் தொடர்ந்து, 2ஆவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில், முதலில் விளையாடிய இலங்கை 344 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் இலங்கை தோல்வியை தழுவியது. நாளை லக்னோவில் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவும் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து, முதல் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா உலகக் கோப்பைக்கான இலங்கை அணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஷனாகாவிற்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகக் கோப்பையை நடத்தும் ஐசிசியின் அனுமதியுடன் ஷனாகா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு காயம் குணமாக குறைந்தது 3 வாரங்கள் ஆகும் நிலையில், அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தசுன் ஷனாகா இதுவரையில் 62 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், 4 முறை அரைசதமும், 2 முறை சதமும் அடித்துள்ளார். இவரது தலைமையிலான இலங்கை அணி 41 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, தொடர்ந்து 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஆனால், தற்போது உலகக் கோப்பையில் 2 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியை சந்தித்த நிலையில், அவர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கை அணியின் கேப்டனாக குசால் மென்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்ட காலமாக அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். ஷனாகாவிற்குப் பதிலாக 15 பேர் கொண்ட இலங்கை அணியில் சமிகா கருணாரத்னே சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்கு முன் அறிவிக்கப்படும் 15 வீரர்களில் காயம் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே ஒருவரை அணியிலிருந்து நீக்க முடியும். ஐசிசி டெக்னிக்கல் கமிட்டி ஷனாகாவின் நீக்கத்திற்கான காரணத்தை ஒப்புக் கொண்டு அனுமதி அளித்த நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ரசிகையை ஆரத் தழுவிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 99 கசையடிகள் தண்டனையா?