டேய் தகப்பா என்னடா இதெல்லாம்? ஓய்வுக்கான ரகசியத்தை அம்பலப்படுத்திய அஸ்வினின் தந்தை
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டதால் ஓய்வு முடிவ அறிவித்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வினின் ஓய்வு முடிவு மதிக்கக்கூடியதாக இருந்தாலும் திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கேள்விகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அஸ்வின் அண்மை காலமாக பல்வேறு போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டார். அவர் தற்போதும் ஃபார்மில் தான் உள்ளார் என்பதற்கு, டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் டாப் 5ல் உள்ளார் என்பது தான் எடுத்துக் காட்டு.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் விளையாட அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா அணிக்கு அஸ்வின் கடும் நெருக்கடியை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2, 3 என அடுத்தடுத்த முக்கியமான போட்டிகளில் அஸ்வினுக்கு பிளேயிங் 11ல் இடம் வழங்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 2வது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது மட்டுமல்லாது 3வது போட்டியில் மிகவும் சிரமப்பட்டு மழையின் உதவியோடு டிரா செய்தது.
இந்நிலையில் தொடரில் இடம் பெற்றிருந்த அஸ்வின் இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் திடீரென ஓய்வை அறித்துள்ளார். பொதுவாக ஒரு வீரர் ஓய்வு பெறப்போகிறார் என்றால் முன்னதாகவே அதளை அறிவித்து கடைசி போட்டியில் சென்ட்-ஆப் நிகழ்வுடன் விடை பெறுவது வழக்கம். அப்படி இல்லாத பட்சத்தில் தொடரின் கடைசி போட்டியில் ஓய்வை அறிவிப்பது வழக்கம். ஆனால் அஸ்வின் தொடரின் இடையிலேயே ஓய்வு பெறுவதக அறித்துள்ளார்.
இதனிடையே அஸ்வினின் ஓய்வு குறித்து பத்திரிகையாளருக்கு பதில் அளித்த அவரது தந்தை, “ரவிச்சந்திரன் அஸ்வின் கிட்டதட்ட 14 முதல் 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிவிட்டார். தொடர்ந்து சிறப்பான அட்டங்களை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவரது திடீர் ஓய்வு அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். காரணம் அவர் அணியில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டதால் இதனை அவர் எப்போது வேண்டுமானாலும் எடுப்பார் என்று நாங்கள் முன்பே கணித்திருந்தோம்” என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வின் தனது ஓய்வு குறித்த விளக்கத்தை வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில் அவரது தந்தை அளித்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரவி்சந்திரன் அஸ்வின், “எனது தந்தை ஊடகங்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற பயிற்சி பெறாதவர். அவரது கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவரை மன்னித்து விடுங்கள்” “டேய் தகப்பா என்னடா இதெல்லாம்?” என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார்.