புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் மற்றும் சபாநாயகராக இருந்த வி.எம்.சி சிவகுமார் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

திமுக ஆட்சியின் போது அமைச்சராகவும் பின்னர் சபநாயகராகவும் இருந்தவர் வி.எம்.சி.சிவகுமார். இவர் பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் காரைக்கால் நிரவியில் சொந்தமாக திருமண மண்டபம் கட்டி வருகிறார்.

இன்று காலை காரைக்கால் நிரவியில் தனது திருமண மண்டப கட்டுமான பணிகளை பார்வையிட சென்றார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று  சிவகுமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது.  இதில் படுகாயமடைந்த சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரியில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள் மிரட்டப்படுவதும் அவர்கள் மீது வெடிகுண்டு வீசப்படுவதும் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர்  புதுச்சேரி சுதானாநகரில் முன்னாள் சுற்றுலா அமைச்சர் ராஜவேலுவின் மகள் வீட்டின்மீது மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்கினர்.

 சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் வெடிகுண்டுவீசப்பட்டது. இதை தொடர்ந்து ஆலைவீதியில் உள்ள வீட்டில் எதிரியை கொலை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. 

கடந்த ஆண்டு தற்போதைய முதல்வர் நாராயண சாமி புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக அப்போதைய முதல்வர் ரங்க சாமியின் மீது குற்றம் சாட்டி சிபிஐ விசாரணை கோரினார். 

காவல்துறையினருக்கும், ரவுடிகளுக்கும் இடையே உள்ள தொடர்பினை கண்டுபிடித்து ரவுடிகளுடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குற்றம்சாட்டியவர் ஆட்சியிலேயே முன்னாள் சபாநாயகர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வி.எம்.சி. சிவக்குமார் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்தார். அப்போது அமைச்சராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்தார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வில் சீட் கிடைக்கவில்லை. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன்பிறகு கடந்த சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.வில் சேர்ந்தார். நிரவி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.