எதிர்கட்சியாலோ அல்லது வேறு சிலராலோதான் திட்டமிட்டு டெல்லியில் கலவரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயான ராவ் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். டெல்லியில் நடைபெறும் கலவரம் மிகவும் தவறான செயல். அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின்போது எதிர்கட்சியாலோ அல்லது வேறு சிலராலோதான் திட்டமிட்டு டெல்லியில் கலவரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது போன்ற சம்பவம்  நடைபெறுவது நல்லதல்ல. இது மிகவும் தவறு.
ரஜினி கட்சி தொடங்குவது பற்றி அவரே அறிவிப்பார். புத்தாண்டு தினத்தில் அதை அறிவிப்பார். சிஏஏ-க்கு எதிராக மக்கள் மாற்றப்பட்டு உள்ளனர். நாட்டு மக்களிடம் சகோதரத்துவம் இல்லாத நிலை தற்போது உருவாகியுள்ளது. பிரதமர் மோடி குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சில நாட்களில் அனைத்து பிரச்னைகளும் சரியகிவிடும்” என சத்ய நாராயணராவ் தெரிவித்தார்.