கொரோனா தடுப்புப் பணிக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் ரூ.1 கோடியை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

ஓ.பி.எஸின் முதல் மகன் ரவீந்திரநாத் குமார். இரண்டாவது வாரிசு ஜெயபிரதீப். மக்களவை தேர்தலில் ரவீந்திர நாத்தின் வெற்றி கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் சென்னையில் உள்ள தனது நண்பர்களை தேனியில் களமிறக்கி விட்டு அதிரடியாக களப்பணியாற்றி, மக்களையும், நிர்வாகிகளையும் கவரும் வகையில் அண்ணன் ரவீந்திரநாத்தை வெற்றி பெற வைத்ததே தம்பி ஜெயபிரதீப் தான் என கூறப்பட்டுகிறது.

மூத்த மகனை எம்.பி.,யாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்த கையோடு அடுத்து உள்ளூர் அரசியலில் தனது 2வது வாரிசு ஜெயபிரதீபையும் களத்தில் இறக்கி விட்டு இருக்கிறார். தேனி மாவட்டம் முழுவதும் பம்பரமாய் சுழன்று வருகிறார் ஜெயபிரதீப். தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் சுழன்று வரும் அவர் கண்மாய்களை சீரமைப்பது, கரையை உயர்த்துவது, நீர்வரத்து கால்வாய்களை சுத்தபடுத்தும், மாணவ- மாணவியர்களுக்கு இலவச நோட்டு பேனா வழங்குவது, மக்களுக்கு இலவச உணவு வழங்குவது என தொகுதி மக்களை விழுந்து விழுந்து கவனித்து வருகிறார். 

இந்நிலையில், இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் கொரோனா தொற்று பரவும் பகுதியாக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவிலான உதவியை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அதன்பேரில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தனியார் நிறுவனங்கள் நிதியுதவியை அளத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் ரூ.1 கோடியை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில் கொரோனா நிதியுதவியாக ஒரு கோடி ரூபாய் கொடுத்து இப்போதே 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு தூண்டு போட்டுவிட்டார் என்று கூறிவருகின்றனர்.