காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எனக்கு மகன் போன்றவர். எனவே பிள்ளைகள் தவறு செய்தால் அதை கண்டிப்பது தாயின் கடமை என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. நேற்று அதன் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். 

இறுதியில் தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறிச் சென்று, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பிறகு பிரதமர் மோடியும் ராகுலை அழைத்துக் கைகொடுத்தார். பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, மோடியை பார்த்து கண்ணடித்தார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதை கண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிர்ச்சியடைந்தார். 

ராகுலின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென தனி மரியாதை உண்டு என்றார். அவர் நரேந்திரமோடி அல்ல, நாட்டின் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை என கண்டிப்புடன் தெரிவித்தார். 

அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக்கேட்டு, அவர்களை கண்டிக்க வேண்டியது தாயின் கடமையாகும். அந்த முறையில் அவரை நான் கண்டிக்கிறேன்' என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.