பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தலைமையாசிரியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரியனா மாநிலத்தில் நடந்துள்ளது. தலைமை ஆசிரியரின் இந்த நடத்தை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியனா மாநிலம், சோனிபட்டில் உள்ள கோஹனா நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, அந்த பள்ளியில் முன்னாள் மாணவி ஆவார்.

பத்தாம் வகுப்பு உடற்கல்வி பாட பிரிவில் தேர்ச்சி பெற வைப்பதற்காக, அந்த மாணவியின் தந்தையிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். 

பணம் கொடுப்பதற்காக, மாணவியையும் அவரது தந்தையையும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டிற்கு அழைத்துள்ளார் தலைமை ஆசிரியர். உடற்கல்வி பாட பிரிவில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 8 ஆம தேதி அன்று பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது தந்தையும் அந்த வீட்டிற்கு சென்றனர்.

வீட்டுக்கு வந்த மாணவியின் தகப்பனாரிடம், உங்கள் மகளுக்குப் பதிலாக வேறொரு மாணவியை தேர்வு எழுத வைத்திருப்பதாகவும், தேர்வு முடியும் வரை மாணவி, இந்த வீட்டில் இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த மாணவியின் தந்தை, மகளை அங்கேயே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். சில மணி நேரங்கள் கழித்து வந்த பார்த்தபோது, மாணவி அழுதபடி இருந்துள்ளார். அப்போது, தலைமை ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தையிடம் கூறியுள்ளார். அது மட்டுமல்லாது, பாலியல் பலாத்காரத்துக்கு, அந்த வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் உதவியதையும் அந்த பெண் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று தலைமை ஆசிரியர் மீது புகார் கொடுத்தார். அதே நேரத்தில், போலீசாரிடம் மாணவி வாக்குமூலமும் கொடுத்தார்.

இதனை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் மீதும், அவருக்கு உதவிய இரண்டு பெண்கள் மீதும்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள தலைமை ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சையும் கவுன்சிலிங்கும் அளிக்கப்பட்டு வருகிறது.

அரியனாவில் பள்ளி மாணவிகள் தொடர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி வருவது வேதனை தருவதாக உள்ளது.