பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ரோடாக் நகரில் உள்ள மாவட்ட சிறைக்கே சென்று நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பளித்தார். இதற்காக அவர் பஞ்ச்குலா நகரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிறை வளாகத்துக்கு சென்றார்.

கடந்த 2002-ம் ஆண்டு  பெண் சீடர்கள் இருவரை பலாத்காரம் செய்ததாக தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவின்பெயரில் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், குர்மீத் சிங் குற்றவாளி என கடந்த வௌ்ளிக்கிழமை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தண்டனை விவரங்களை அப்போது நீதிபதி அறிவிக்காமல், 28 -ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்து இருந்தார்.

இதையடுத்து, சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என அறிவிக்க ப்பட்டதும் அவரின் ஆதரவாளர்கள் அரியானாவின் பஞ்ச்குலா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும், பஞ்சாபிலும் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர்.இந்த கலவரம் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியது.

பஸ்கள், வாகனங்கள், ஊடகத்தின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக தேரா சச்சா சவுதா அமைப்பினர் 926 பேர் கைது செய்யப்பட்டனர். 56 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 3 நாட்களாக பஞ்சாப், அரியா நகரில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் , போலீசாருடன் இணைந்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை பல நகரங்களில் தளர்த்தாமல் வைத்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, குர்மீத் சிங் மீதான வழக்கில் தீர்ப்பு  சிறையிலேயே அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. தீர்ப்பு கூறப்படுவதையொட்டி பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நேற்று பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை விடப்பட்டு இருந்து.

பஞ்சாப்பில் 4 கம்பெனி ராணுவப்படையினரும், அரியானாவில் 3700 ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

தீர்ப்பு கூறப்படும் சுனாரியா நகரில் அமைந்துள்ள சிறையைச் சுற்றி பல அடுக்கில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

 சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் ஏதும் பரவக்கூடாது என்பதற்காக மொபைல் இன்டர்நெட் சேவை   அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நண்பகல் 2 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஜக்திப் சிங் சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார்.

அதன்பின், சிறைக்குள் அமைக்கப்பட்டு இருந்த விசாரணை மையத்துக்கு சென்ற நீதிபதி, சாமியார் தரப்பு வழக்கறிஞர்களையும், அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் தங்களின் இறுதிக்கட்ட வாதத்தை பேச 10 நிமிடங்கள் அவகாசம் அளித்தார்.

அப்போது சி.பி.ஐ. தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பலாத்கார வழக்கில் குற்றவாளியான சாமியார் ராம் ரஹீமுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், சாமியார் தரப்பு வழக்கறிஞர்கள், ராம் ரஹீம் பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துள்ளதாலும், வயது மூப்பை காரணம் காட்டி அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, நீதிபதி ஜெக்தீப் சிங் தனது தீர்ப்பை வாசித்தார். இதில் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 லட்சம் அபராதமும், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் தலா ரூ.14 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.