உங்களுக்கு அடிக்கடி வருவது ஜலதோஷமா அல்லது சைனஸா? என்பதை புரிந்து கொள்ள அவற்றின் அறிகுறிகளையும், காரணங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜலதோஷம் என்பது மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல், தும்மல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஜலதோஷம் நீண்ட காலம் நீடித்தால் அதுதான் சைனஸாக மாறும். எனவே சரியான நேரத்தில் அதனை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஒவ்வாமையின் காரணமாகவும் சைனஸ் ஏற்படும். மேலும் சளி மற்றும் சைனஸ் அறிகுறிகள் சில சமயங்களில் ஒன்று போல இருக்கலாம். ஆனால் சைனஸ் சளியை விட அதிக காலம் நீடிக்கும் மற்றும் அதன் அறிகுறிகளும் தீவிரமாக இருக்கும். எனவே இப்போது சளி மற்றும் ஜலதோஷத்திற்கு உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜலதோஷம் மற்றும் அதன் அறிகுறிகள் :

- ஜலதோஷம் என்பது வைரஸ் மூலம் பரவும் சுவாசக் குழாயின் தொற்று ஆகும். இந்த தொற்றானது நம் உடலை சென்றடைந்த பல மணி நேரத்திற்கு பிறகு தான் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

- தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி, இருமல், லேசான காய்ச்சல், மூக்கடைப்பு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

- இது பொதுவாக ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்.

- சிகிச்சை இல்லாமல் இந்த அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இதற்கு போதுமான அளவு ஓய்வு மற்றும் OTC மருந்துகள் போதும்.

சைனஸ் மற்றும் அதன் அறிகுறிகள் :

- சைனஸ் என்பது சைனஸ் குழிகளில் ஏற்படும் வீக்கம் அல்லது பாதிப்பு ஆகும். இது வைரஸ், பாக்டீரியா அல்லது ஒவ்வாமை போன்றவற்றால் ஏற்படும்.

-மூக்கடைப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி, காய்ச்சல், சோர்வு, கண்கள், கன்னங்கள் மற்றும் நெற்றியை சுற்றி முக வலி அல்லது அழுத்தம், கீழே குனியும் போது அதிகப்படியான தலைவலி, வாசனை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

- சைனஸ் தொற்றானது சில சமயங்களில் காய்ச்சல் மற்றும் அதிகப்படியான சளியை ஏற்படுத்தும்.

- பொதுவாக சைனஸ் ஆனது சளியை விட நீண்ட காலம் நீடிக்கும். அதாவது கடுமையான சைனஸ் சில வாரங்கள் வரி நீடிக்கும். நாள்பட்ட சைனஸ் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். இதற்கு கண்டிப்பாக சிகிச்சை தேவைப்படும்.

சிகிச்சைகள் :

ஜலதோஷம் - நீராவி பிடித்தல், ஓய்வு, திரவ உணவுகள், நாசியில் ஸ்ப்ரே மற்றும் அறிகுறிகளை குறைக்க மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

சைனஸ் - மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவை:

- எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பத்து நாட்களுக்கு மேல் நீடித்தால்

- கடுமையான காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு, முகத்தில் கடுமையான வலி அல்லது அழுத்தம், பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறினால், மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தால், கண்களை சுற்றி வழி அல்லது பார்வையில் மாற்றங்கள் ஏற்பட்டால்