உணவிற்கு இடையே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என்ற கருத்து பல காலமாக நிலவி வருகிறது. இது உண்மை தானா? உணவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நமது உடலில் நீர் இன்றியமையாத பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதால் செரிமானம் தாமதமாகும் அல்லது தடுக்கப்படும் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. உண்மையில் இந்த கூற்று உண்மையா? வாருங்கள், தெரிந்து கொள்ளலாம்.
தண்ணீர் குடித்தால் செரிமானம் பாதிக்குமா?
உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதால் செரிமான நொதிகள் நீர்த்துப் போகும் என்றும், இதனால் உணவு சரியாக ஜீரணமாகாது என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால், நமது வயிறு மிகவும் திறமையாக செயல்படக்கூடியது. நாம் குடிக்கும் தண்ணீர் உணவுடன் கலந்தாலும், செரிமான நொதிகள் அவற்றின் வேலையைச் சரியாகச் செய்யும். வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவைச் செரிக்க போதுமான அடர்த்தியுடன் இருக்கும். சிறிதளவு தண்ணீர் சேர்வதால் அதன் அடர்த்தி குறைந்து விடாது.
அதிகம் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
உண்மையில், உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவக்கூடும். உணவு விழுங்குவதை தண்ணீர் எளிதாக்குகிறது. மேலும், வயிற்றில் உணவு கூழாக மாறவும் தண்ணீர் உதவுகிறது. இதனால் செரிமான நொதிகள் உணவின் அனைத்து பகுதிகளையும் எளிதில் சென்றடைந்து செரிக்க உதவுகின்றன. அதே நேரத்தில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு, குறைவாக சாப்பிட நேரிடலாம். இது சிலருக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போக வழி வகுக்கலாம். ஆனால், இது செரிமானத்தை நேரடியாக தடுப்பதில்லை.
சாப்பிடும் முன் தண்ணீர் குடித்தால்...
சில ஆய்வுகள் உணவு உண்ணும் முன் தண்ணீர் குடிப்பதால் வயிறு நிரம்பி, குறைவான கலோரிகள் உட்கொள்ளப்படுவதால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது என்று கூறுகின்றன. ஆனால், உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதால் செரிமானம் தாமதப்படுகிறது என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆக, உணவு உண்ணும் போது மிதமான அளவில் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் தடுக்கப்படாது. மாறாக, அது செரிமானத்திற்கு உதவக்கூடும். முக்கியமாக, உணவை விழுங்குவதற்கும், உணவு கூழாக மாறுவதற்கும் தண்ணீர் அவசியம். எனவே, இந்த கட்டுக்கதைகளை நம்பாமல், உங்கள் உடலின் தேவைக்கேற்ப சரியான அளவில் தண்ணீர் குடியுங்கள். உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளும் முறை குறித்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இது ரொம்ப முக்கியம் :
செரிமானக் கோளாறுகள், வாயு தொல்லை, அஜீரணம், அசிடிட்டி போன்றவை பலருக்கும் தொல்லை தரும் விஷயங்கள். இதற்கு காரணம், நாம் சாப்பிடும் உணவு மட்டுமல்ல. தவறான நேரத்தில் சாப்பிடுவதும், அதிக தண்ணீர் குடிப்பதும் கூட காரணங்கள் தான். பசியில்லாமல் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, சூடான அல்லது குளிர்ச்சியான பானங்களை குடிப்பதும் செரிமானத்தை பாதிக்கும். சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடுவதன் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்கலாம். மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது அவசியம்.
செரிமான கோளாறுக்கு இது தான் காரணம் :
பலரும் செரிமானக் கோளாறு ஏற்பட்டால், என்ன சாப்பிட்டோம், ஏன் இப்படி வயிறு வலிக்கிறது என்று யோசிப்பார்கள். ஆனால், சாப்பிடும் நேரம் முக்கியம். செரிமான மண்டலம் தயாராக இல்லாத போது சாப்பிடுவது தவறு. தொடர் பயணங்கள், நேரமின்மை காரணமாக பசியை அலட்சியம் செய்வது செரிமானக் கோளாறுகளுக்கு முக்கிய காரணம். சரியான தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம், கோபம், எரிச்சல், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் கூட செரிமானம் பாதிக்கப்படும். இரவில் வேலை செய்பவர்கள் காலை உணவுக்குப் பின் தூங்க வேண்டும். மதிய உணவுக்குப் பின் தூங்கினால் உடல் எடை கூடும். கல்லீரலும் சரியாக வேலை செய்யாது.
செரிமானக் கோளாறால் தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன என்கிறார்கள். எனவே, சரியான உணவை, சரியான அளவில், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். மன அழுத்தம் இருக்கும்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.
