கருப்பு நிற பிளாஸ்டிக் உணவு பெட்டிகள் சில அபாயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் அபாயங்கள் குறித்தும், அவற்றிற்கு மாற்றான பெட்டிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள்

தற்போதைய காலத்தில் உணவை சேமிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் பயன்படுகின்றன. குறிப்பாக கருப்பு நிறத்திலான உணவுப் பெட்டிகள் உணவை பேக்கிங் செய்ய பயன்படுகின்றன. ஆனால் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களாகும். இவை பெரும்பாலும் எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இவை சில நச்சுப் பொருட்களை கொண்டிருக்கலாம். குறிப்பாக வெப்பம் அல்லது அமிலம் கலந்த உணவுடன் இவை தொடர்பு கொள்ளும் பொழுது அந்த நச்சுப் பொருட்கள் உணவில் கலக்க வாய்ப்பு உள்ளது. அது மனிதர்களுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.

புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்

கருப்பு பிளாஸ்டிக் பொருட்களில் கார்சினோஜெனிக் ரசாயனங்கள் நிறைந்திருக்கும். கார்சினோஜெனிக் என்பது புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளாகும். கருப்பு நிறத்துக்காக பயன்படும் கார்பன் பிளாக் என்கிற பொருள் பாலிசைக்கிளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்களை கொண்டிருக்கும். இது புற்றுநோயை அதிகரிக்கும் அபாயம் கொண்டது. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லா தீ தடுப்பான்கள் உணவில் கசிந்து நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டில் குறிக்கிடலாம். இது இனப்பெருக்க பிரச்சனைகளுடன் உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த பிளாஸ்டிக்கில் காரியம், காட்மியம் போன்ற கன உலோகங்களும் இருக்கலாம். இவை உடலுக்குள் செல்லும் பொழுது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த கொள்கலனில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலந்து உடலுக்குள் சென்று உடல் உள் உறுப்புகளை பாதிக்கலாம்.

கருப்பு பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்ன?

குறிப்பாக கருப்பு பிளாஸ்டிக் பொருட்களை மைக்ரோவேவில் வைத்து சூடு படுத்துவதோ அல்லது சூடான உணவை இதில் வைப்பதோ மிகவும் ஆபத்தானது. ஏனெனில் வெப்பம், இந்த ரசாயனங்கள் உணவில் கலக்கும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. உணவை பாதுகாப்பாக சேமிக்கவும் எடுத்துச் செல்லவும், கருப்பு பிளாஸ்டிக்கிற்க்கு பதிலாக பாதுகாப்பான மாற்றுக்களை பயன்படுத்தலாம். கண்ணாடிக் கொள்கலன்கள் மிகவும் பாதுகாப்பானவை. இவை நச்சுத்தன்மையற்றவை. மைக்ரோவேவ் மற்றும் அடுப்பில் வைத்து பயன்படுத்த ஏதுவானவை. துருப்பிடிக்காத எஃகு என்று அழைக்கப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்கள் சமையலுக்கு மிகவும் உகந்தவை. இவை உணவை சேமிக்கவும் உணவுகளை எடுத்துச் செல்லவும் ஏற்றவை. மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியவை. இவை எந்த ரசாயனத்தையும் உணவில் கலப்பதில்லை.

உணவுகளை சேமிக்காதீர்கள்

செராமிக் கொள்கலன்கள் வெப்பத்தை தாங்க கூடியவை. மேலும் உணவை சேமிப்பதற்கு இது சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. சமையல் பாத்திரங்களுக்கு மரத்தாலான அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட கரண்டிகள் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தலாம். கரும்புச்சக்கை, பாக்கு மட்டை, சோள மாவு போன்ற இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள், தட்டுகள், கப்புகள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை. உணவகங்களில் இருந்து கருப்பு பிளாஸ்டிக் பொருள்களில் வரும் உணவை உடனடியாக கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்திற்கு மாற்றுவது நல்லது. உணவகங்களுக்கு செல்லும் பொழுது அங்கு கருப்பு நிற பிளாஸ்டிக் பொருட்களில் உணவை பார்சல் செய்வதை பார்த்தால் அதை தடுத்து நிறுத்துதல் வேண்டும்.

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

கருப்பு பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும், அவை தயாரிக்கும் முறை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். உணவகங்களில் கருப்பு நிற பிளாஸ்டிக்கில் உணவு பார்சல் செய்யப்படும் பொழுது அது குறித்த விளைவுகளை அவர்களிடம் எடுத்துக் கூறி மாற்று வழியை ஏற்பாடு செய்ய சொல்ல வேண்டும். ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு கருப்பு பிளாஸ்டிக்கை தவிர்த்து பாதுகாப்பான மாற்றுகளை பயன்படுத்த வேண்டியது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.