தினமும் காலை எழுந்ததும் மந்தமாக உணர்கிறீர்கள் என்றால், இந்த 5 காலை பழக்க வழக்கங்களை உங்களது வாழ்க்கையில் இணைத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அவை என்னவென்று இந்த பதிவில் காணலாம்.

உங்கள் காலைப்பொழுதை நீங்கள் தொடங்கும் விதம் தான் உங்கள் முழு நாளுக்கும் ஒரு நல்ல மனநிலையை தரும். அந்த வகையில் காலையில் சுறுசுறுப்புடன் எழுந்து பணிகளை தொடங்குவது அந்நாளை சிறப்பாக அமைப்பதற்கான அடித்தளமாகும். ஆனால் சிலருக்கோ காலை எழுந்ததுமே மந்தமாக உணர்வார்கள். அதனால் அன்றாட வேலைகளை கூட செய்வதற்கு அவர்களுக்கு சக்தி இருக்காது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

சரியாக தூங்கவில்லை என்றால் கூட இப்படி நிகழும் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் பல மணி நேரம் நன்றாக தூங்கியும் எழும்போது சோர்வாக உணர்வார்கள். இதற்கு முக்கிய காரணம் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையாகும். மேலும் எந்தவித உடல் அசைவும் இல்லாமல் இருப்பதும் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.

இத்தகைய சூழ்நிலையில் உங்கள் காலை வழக்கத்தில் எளிமையான மற்றும் ஆரோக்கியமான சில பழக்கங்களை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு ஆற்றல் மற்றும் மனம் தெளிவு அதிகரிக்கும். இந்த பதிவில் உங்களது காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் 5 சக்தி வாய்ந்த பழக்கங்கள் குறித்து காணலாம்.

காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் 5 சக்தி வாய்ந்த பழக்கங்கள் :

1. தண்ணீர் குடி

தினமும் காலையில் 6 மணிக்குள் எழுந்ததும், ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தண்ணீர் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை தொடங்கும். நச்சுக்களை வெளியேற்ற உதவும் மற்றும் மூளையை நீரேற்றம் செய்யும். இதனால் நாள் முழுவதும் நன்றாக உணர்வீர்கள்.

2. சூரிய ஒளி

காலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பது வைட்டமின் டி பெற உதவுகிறது. மேலும் இது மனநிலையை மேம்படுத்தி உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

3. உடற்பயிற்சி செய்

தினமும் காலை வெறும் 5 முதல் 10 நிமிடங்கள் நீட்சி, யோகா அல்லது லேசான உடற்பயிற்சி செய்வதை பழக்கமாகக் கொள்ளுங்கள். உடல் இயக்கம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசைகள் மற்றும் மூளைக்கு ஆக்சிஜனை வழங்கும். பதட்டத்தை நீக்கி மனக் கூர்மையை அதிகரிக்கும்.

4. ஆரோக்கியமான உணவு

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை காலை உணவாக சாப்பிடுங்கள். இவை ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். உதாரணமாக நட்ஸ், வாழைப்பழம், ஓட்ஸ், முட்டை, ஸ்மூர்த்தி மற்றும் முழு தானியங்கள் போன்றவையாகும். இவை உடலுக்கு சக்தியை கொடுக்கும் மூலப் பொருளாகும். ஆனால், காலை 8 மணிக்குள் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

5. செல்போனுக்கு 'நோ'

காலை எழுந்ததுமே படுக்கையில் இருந்தபடியே செல்போனை பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இந்த பழக்கம் உங்களது உடல் சுறுசுறுப்பு மற்றும் நேர்மறை சிந்தனை என அனைத்தையும் தடுக்கும். எனவே, காலையில் முழு ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்பட மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.