பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்று பிரண்டை. இது கீரை வகைகளில் ஒன்று. இதை சுத்தம் செய்வது கடினம் என பலரும் சமைப்பது கிடையாது. ஆனால் வாரத்திற்கு ஒருமுறை இதை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
பிரண்டை, எலும்புகளை வலுப்படுத்துவது, மூட்டு வலியை குறைப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, இரத்த ஓட்டத்தை சீராக்குவது என பல்வேறு மருத்துவ குணங்களை இது கொண்டுள்ளது. குறிப்பாக, மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் வீக்கத்தை குறைக்கும் சக்தி பிரண்டைக்கு அதிகம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 2 கட்டு
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வரமிளகாய் - 3-4
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5-6
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரண்டை துவையல் செய்முறை:
பிரண்டையின் இளம் தண்டு மற்றும் இலைகளை நன்றாக கழுவி, ஓரங்களில் இருக்கும் நார்களை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதக்கியதும் அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெட்டி வைத்த பிரண்டையை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிரண்டை வதங்கியதும் புளி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
வதக்கிய கலவை நன்றாக ஆறியதும், மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின்னர், கடுகு, உளுந்து ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் தாளித்து துவையலில் ஊற்ற வேண்டும். சுவையான மற்றும் ஆரோக்கியமான பிரண்டை துவையல் தயார்.
எப்படி சாப்பிடுவது?
இந்த பிரண்டை துவையலை வாரத்தில் ஒருமுறை மதிய உணவிலோ அல்லது இரவு உணவிலோ சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளுடனும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது.
கூடுதல் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள்:
சிலருக்கு பிரண்டை சாப்பிடுவதால் லேசான வயிற்று உபாதைகள் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால், அடுத்த முறை குறைவான அளவு பயன்படுத்தவும்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பிரண்டை சாப்பிடுவதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் பிரண்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பிரண்டையை எப்போதும் சமைத்து தான் சாப்பிட வேண்டும்.
பிரண்டையை சுத்தம் செய்யும் போது கைகளில் ஏற்படும் அரிப்பை தவிர்க்க, தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
