மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி சாப்பிட்டிருப்பீர்கள் ஆனால் இரண்டின் சுவையும் மிக்ஸ் செய்தது போன்ற தனித்துவமான சுவையில் ஒரு மாங்காய் டிஷ்ஷை கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் மட்டுமே சுவைக்க முடியும். மாங்காய் உப்காரி செய்து பார்க்கலாம்.
"அம்பே" என்றால் கொங்கணி மொழியில் மாங்காய், "உப்காரி" என்றால் கறி அல்லது பச்சடி என்று பொருள். குறிப்பாக கோடை காலத்தில், மாம்பழ சீசனில் இந்த உப்காரி கடலோர கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். இது மங்களூரு, உடுப்பி, குந்தாபுரா போன்ற பகுதிகளின் பாரம்பரிய சமையலின் முக்கிய அங்கமாகும். இது வெறும் ஒரு கறி மட்டுமல்ல, அசைவ உணவுகளுக்கும் கூட ஒரு சிறந்த பக்க உணவாகப் பரிமாறப்படுகிறது.
அம்பே உப்காரியின் தனித்துவம் :
அம்பே உப்காரி பல மாங்காய் கறிகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் முக்கிய தனித்துவம், பழுத்த மாங்காய்களின் இயற்கையான இனிப்பு, மிளகாயின் காரம் மற்றும் தேங்காய் எண்ணெயின் நறுமணம் ஆகியவற்றின் சரியான சமநிலையாகும். பாரம்பரியமாக, இந்த உப்காரிக்கு ரசம் புரி (Rasapuri) மாம்பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரசம் புரி மாம்பழங்கள் இனிப்புச் சுவை நிரம்பியதாகவும், அதிக நார்ச்சத்தை கொண்டிராததாகவும் இருக்கும். இருப்பினும், ரசம் புரி மாம்பழங்கள் கிடைக்காத பட்சத்தில், நன்கு பழுத்த, இனிப்புச் சுவை கொண்ட வேறு எந்த வகை மாம்பழத்தையும் பயன்படுத்தலாம்.
அம்பே உப்காரி தயாரிப்பது எளிமையானதுதான், ஆனால் சரியான சுவையைப் பெறுவதற்கு சில நுட்பங்கள் அவசியம்.
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த மாம்பழங்கள் - 2-3
வெல்லம் - 2-3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2-3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில், மாம்பழத்தின் சதைப்பகுதியை (கூழ் போல) ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளலாம். இதனுடன் வெல்லம், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சுமார் அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேகவிடவும். மாம்பழம் நன்கு மென்மையாகும் வரை, மேலும் வெல்லம் உருகி, கூழ் கறிப் பதம் வரும் வரை சமைக்கவும். கறி சற்று கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். இந்த தாளித்த கலவையை மாங்காய் கறியில் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான்! சுவையான அம்பே உப்காரி தயார்.
பரிமாறும் முறை :
அம்பே உப்காரி சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி போன்றவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம். இது பல நேரங்களில் அப்பளம் மற்றும் நெய் சாதத்துடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இதன் இனிப்பு-கார சுவை பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சில நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மாங்காய் சீசன் முடிவதற்குள் இந்த சுவையான உப்காரியைத் தவறாமல் சுவைத்துப் பாருங்கள்.
