வீட்டில் தோசை தீர்ந்து போச்சு காலையில் என்ன சாப்பாடு செய்வது, இரவு டிபன் என்ன செய்வது என யோசிக்கிறீங்களா? கவலையை விடுங்க. உடனடியாக செய்யக் கூடிய இந்த பொட்டுக்கடலை தோசையை செய்து அசத்துங்க. இப்படி ஒரு தோசையை இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க.

சில சமயங்களில் மாவு இல்லாமலோ அல்லது அவசரமாக தோசை செய்ய வேண்டிய நிலையிலோ இந்த பொட்டுக்கடலை தோசை மிகவும் கை கொடுக்கும். இது சுவையில் சற்றும் குறையாமல், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

பொட்டுக்கடலை தோசையின் தனித்துவம்:

வழக்கமான தோசைக்கு மாவு அரைத்து புளிக்க வைக்க பல மணி நேரம் ஆகும். ஆனால், பொட்டுக்கடலை தோசைக்கு ஊறவைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், மிகக் குறுகிய நேரத்தில் இதை செய்துவிடலாம். பொட்டுக்கடலையில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ரவையும் ஓரளவுக்கு ஆற்றலை கொடுக்கும். ஆகையால், இது ஒரு சத்தான காலை உணவு அல்லது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டில் எப்போதும் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த தோசையை எளிதாக் செய்துவிடலாம். சமையல் புதிதாக பழகுபவர்கள் கூட இந்த தோசையை எளிதாக செய்துவிட முடியும்.

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - 1 கப்

ரவை - 1/2 கப்

தயிர் - தேவையான அளவு

இஞ்சி - 1 துண்டு

சின்ன வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லி தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, ரவை, இஞ்சி, தயிர் இவற்றுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது சீரகத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும்

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் சூடானதும், ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை கல்லில் மெல்லியதாக ஊற்றவும். தோசையின் ஓரங்களில் சிறிது எண்ணெய் ஊற்றி தோசை பொன்னிறமாக வெந்து மொறுமொறுப்பானதும் திருப்பி போட்டு சிறிது நேரம் வேக வைத்து எடுத்தால் சுவையான பொட்டுக்கடலை தோசை தயார்.

சுவையான பொட்டுக்கடலை தோசையை சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.