சாப்பாடு செய்வதற்கு நேரம் இல்லையா? கவலையை விடுங்க. வெறும் 10 நிமிடத்தில் இந்த சுவையான தேங்காய் பால் சாதத்தை செய்து அசத்தி விடலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸிற்கு கொடுத்து அனுப்புவதற்கும் மிகவும் ஏற்ற ரெசிபி. ஆரோக்கியமானதும் கூட.
தேங்காய் பால் சாதம் என்பது தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு சுவையான, எளிமையான மற்றும் சத்தான உணவு. இது மிதமான மசாலாப் பொருட்களுடன் தேங்காய் பாலில் சமைக்கப்படுவதால், தனித்துவமான மணத்தையும், சுவையையும் தருகிறது. இதை தனியாகவோ அல்லது பல்வேறு கறிகளுடனோ சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி: 2 கப்
தேங்காய்: 1 முழு தேங்காய்
பெரிய வெங்காயம்: 1
பச்சை மிளகாய்: 2-3
இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி
பட்டை: 1 இன்ச் அளவு - 2 துண்டுகள்
கிராம்பு: 3-4
ஏலக்காய்: 2-3
பிரியாணி இலை: 1
முந்திரி: 10-15 (விரும்பினால்)
நெய்: 2-3 தேக்கரண்டி
எண்ணெய்: 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை: ஒரு கொத்து
கொத்தமல்லி இலை: சிறிது
உப்பு: தேவையான அளவு
புதினா இலை: ஒரு கைப்பிடி
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு அலசி, குறைந்தது 20-30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து பின் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
தேங்காயை சில்லுகளாக நறுக்கி மிக்ஸியில் சுமார் 1 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு மெல்லிய துணி அல்லது வடிகட்டி மூலம் அரைத்த தேங்காயை பிழிந்து, முதல் தேங்காய் பாலை (திக் பால்) தனியே எடுத்து வைக்கவும். மீண்டும் அதே தேங்காய்த் துருவலுடன் 1-1.5 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, இரண்டாம் தேங்காய் பாலை (லைட் பால்) தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். நெய் உருகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து வறுக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது ஊறவைத்த அரிசியை சேர்த்து, மெதுவாக அரிசி உடையாமல் கவனமாக கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைத்துள்ள முதல் மற்றும் இரண்டாம் தேங்காய் பாலை ஒன்றாக சேர்த்து, அரிசிக்கு தேவையான அளவு குக்கரில் ஊற்றவும். நன்கு கிளறி, உப்பை சரிபார்த்து குக்கரை மூடி, மிதமான தீயில் 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக விடவும். விசில் வந்ததும், அடுப்பை அணைத்து, பிரஸர் அடங்கியதும், குக்கர் மூடியைத் திறந்து, சாதத்தை ஒரு கரண்டியால் மெதுவாக கிளறி விடவும்.
பரிமாறுதல்:
முந்திரியை பொன்னிறமாக வறுத்து சாதத்துடன் சேர்க்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும். கமகமக்கும் தேங்காய் பால் சாதம் தயார்.
கூடுதல் குறிப்புகள்:
பொன்னி அரிசி அல்லது பாசுமதி அரிசி இரண்டுமே நன்றாக இருக்கும். சீரக சம்பா அரிசியிலும் செய்யலாம்.
விருப்பப்பட்டால், கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி சேர்க்கலாம். இது தேங்காய் பால் சாதத்தை மேலும் சத்தானதாக மாற்றும்.
தேங்காய் பால் சாதத்திற்கு தக்காளி குருமா, வெஜிடபிள் குருமா, கத்திரிக்காய் குழம்பு, சிக்கன் குருமா உடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
அரிசியை அதிகமாக வேக விடக்கூடாது. சரியான அளவு தண்ணீர் மற்றும் சரியான விசில் எண்ணிக்கை முக்கியம். குக்கரில் இருந்து ஆவி வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 5-7 நிமிடம் வேகவிட்டாலும் உதிரியாக வரும்.
