கண்களுக்கு கீழே கருவளையம் வருவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கண்களுக்கு கீழே கருவளையம் இருப்பது முகத்தின் அழகை கெடுப்பதால் பலரும் கவலைப்படுகிறார்கள். தூக்கமின்மை, மொபைல் போனை அதிகமாக பயன்படுத்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் மட்டுமல்ல, பிற உடல்நல பிரச்சினைகளாலும் கருவளையம் ஏற்படுகின்றது. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் :
1. இன்சுலின் எதிர்ப்பு
இன்சுலின் எதிர்ப்பு காரணமாக உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதன் விளைவாக வீக்கம் மற்றும் தோல் நிறம் மாறும். மேலும் இது கண்களுக்கு கீழே கருவளையத்தையும் ஏற்படுத்தும்.
2. உயர் கார்டிசோல்
மன அழுத்தம் மற்றும் கார்டிசோல் அதிகரிப்பு காரணமாக கண்களுக்கு கீழே கருவளையம் வரும்.
3. இரத்தசோகை
உடலில் இரும்புச் த்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக ஆக்சிஜன் குறைந்த அளவு உங்கள் திசுக்களை சென்றடையும். மேலும் கண்களுக்கு கீழே கருவளையத்தை ஏற்படுத்தும்.
4. சிறுநீரக பிரச்சனைகள்
சிறுநீரக செயல்பாடு மோசமாக இருந்தால் சருமம் மந்தமாகும். மேலும் சிறுநீரகங்கள் திறம்பட செயல்படாத போது உடலில் நச்சுக்கள் உருவாகும். இது திரவ தக்கவைப்பு மற்றும் கண்களை சுற்றி நிறமி மாற்றங்களுக்கு வழிவகுக்கும். ஆனாலும் அனைத்து கருவளையம் சிறுநீரக பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்காது போதுமான தூக்கம், நீரேற்றம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
5. கல்லீரல் நோய்
கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஏனெனில் பலவீனமான கல்லீரல் இரத்தத்திலிருந்து நச்சுக்களை வடிகட்டி போராடும். இதனால் சருமம் மந்தமாகும். ஆனால் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களில் ஐந்தில் ஒருவருக்கு தான் கண்களுக்கு கீழே கருவளையங்கள் ஏற்படும். சமச்சீரான உணவு, போதுமான நீரேற்றம் மற்றும் மது அருந்துவதை நிறுத்துதல் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
6. இரைப்பை அலர்ஜி
கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் நாள்பட்ட இரைப்பை அலர்ஜுடனும் தொடர்புடையது. எப்படியெனில், வயிற்றுப்புரணி மீண்டும் மீண்டும் வீக்கம் அடையும்போது உடலானது ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதில் சிரமமாகும். இதனால் சோர்வு மற்றும் சருமம் மந்தமாகிவிடும். வயிறு உணவை சரியாக பதப்படுத்த முடியாத போது நச்சுக்கள் குவியத் தொடங்கும். இதனால் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுகிறது. ஆகவே இரைப்பை அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் சீரான உணவை சாப்பிட வேண்டும் மற்றும் காரமான எண்ணெய் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
7. ஒழுங்கற்ற மாதவிடாய்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக பெண்களின் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படும். மாதவிடாய் தாமதமாகும் போது அல்லது வலி மிகுந்ததாக இருக்கும் போதும் இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் முகதோலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது குறையும். இதன் விளைவாக கண்கள் சோர்வாக இருக்கும். கருவளையம் வரும். ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் தொடர்ந்தாலோ, ரத்தசோகை அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ளதா என்பதை சரி பார்த்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிற காரணங்கள்
- வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் கருவளையம் ஏற்படும். எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். இது தவிர தூசி, அலர்ஜி, கண்களில் அரிப்பு பிரச்சனை அதிகரித்தாலும் கருவளையத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இது குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை.
- சூரிய ஒளி காரணமாக சருமத்தில் நிரமி மற்றும் கருவளையம் ஏற்படும். புகை பிடித்தல் மது அருந்துதல் பழக்கம் காரணமாக உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நீர் இழப்புக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக கருவளையம் உருவாகும்.
கருவளையத்தை நீக்குவது எப்படி?
- வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். இதனால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் குறையும்.
- பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
- தூக்கமின்மையால் ஏற்படும் கருவளையத்தை போக்க தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- கார்டிசோல் அளவு அதிகரிப்பால் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படும். அதை குறைக்க யோகா, தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
- வைட்டமின் டி குறைபாட்டால் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளலாம்.
- திரை நேரத்தை கட்டுப்படுத்துங்கள். இரவு தூங்குவதற்கு முன் கண் அழுத்தத்தை குறைப்பது நல்லது. இதனால் தூக்கத்தின் தரம் மேம்படும்.
மேலே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை குணப்படுத்தலாம். இது தவிர, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் கருவளையம் மட்டுமல்ல பல உடல்நிலை பிரச்சினைகள் வருவதையும் தடுக்கலாம்.
