வாக்கிங் vs ரன்னிங்- பெண்கள் நடைபயிற்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கனும்?
Walking vs Running : தினமும் ஓடுவதை விடவும் நடப்பது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

வாக்கிங் vs ரன்னிங்- பெண்கள் நடைபயிற்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கனும்?
தினமும் நடைபயிற்சி செய்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. ஒவ்வொரு தனிநபர்களுக்கும் நடக்கும் தூரம், வேகம், நேரம் ஆகியவை மாறுபடுகிறது. இதனால் கிடைக்கும் நன்மைகளும் வேறுபடும். ஆனால் ஓடுவதை விடவும் நடைபயிற்சி நல்லது என சொல்லப்படுகிறது. நடப்பது ஏன் நல்லது, வாக்கிங் ஏன் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
நடப்பது ஏன் நல்லது?
நடைபயிற்சி குறைந்த தாக்கம் கொண்டது. ஆனால் ஓடுவதற்கு அதிக ஆற்றல் தேவை. அதனுடன் ஓடுபவர்கள் கூடுதல் பயிற்சிகளை செய்து உடலை அதற்கு தயாராக வைக்க வேண்டும். ஓடும்போது காயங்கள் ஏற்படலாம். ஆனால் நடக்கும்போது காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. அனைத்து தரப்பினரும் நடைபயிற்சி செய்ய முடியும். எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை. நடப்பதன் நன்மைகள் பின்வருமாறு:
இதையும் படிங்க: உண்மையில் தொப்பையை குறைக்க 'எது' உதவும் தெரியுமா? வாக்கிங் vs ரன்னிங்?
மன ஆரோக்கியம்:
நடைபயிற்சி செய்வதால் மனநிலை மேம்படும். மனச்சோர்வு குறைந்து மனத் தெளிவு பிறக்கும். வீட்டை விட்டு வெளியே சென்று மெதுவாக நடப்பது மனதை அமைதிபடுத்தும்.
மூட்டுகள் வலிமை:
நடைபயிற்சி செய்வதால் மூட்டுகள் உயவூட்டப்படுகிறது. நாள்பட்ட மூட்டுவலி அல்லது பிற மூட்டு வலி அவதிப்படுவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். முதுகு வலியும் குறையும்.
மிதமான பயிற்சி:
தினமும் நடப்பது உடலுக்கு மிதமான பயிற்சியை வழங்குகிறது. நீங்கள் ஓடுவதை விட நடப்பது ஒட்டுமொத்த உடலுக்கும் எளிதானது. மூட்டுகள், தசைகளில் அதிக தாக்கம் ஏற்படாது. ஆனால் அவற்றை வலுப்படுத்தும். ஏற்கனவே மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள், புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்களுக்கு நடைபயிற்சி வரப்பிரசாதம். பாதுகாப்பான பயிற்சியும்கூட.
நிலைத்தன்மை:
நடைபயிற்சிக்கு என நாம் புதிய காலணிகளோ, ஷூவோ கூட வாங்க தேவை இல்லை. இதற்கென சிறப்பு பயிற்சி தேவையில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். நடைபயிற்சி எளிமையான மற்றும் நிலையான உடற்பயிற்சியாகும்.
யாருக்கு நல்லது?
நடைபயிற்சி எல்லோரும் செய்யக் கூடிய எளிய பயிற்சி. வயதானவர்கள், உடற்பயிற்சி நேரம் ஒதுக்க முடியாத இல்லத்தரசிகள் உள்ளிட்டோருக்கு சிறந்த தேர்வாகும். இதனை தினமும் பழக்கப்படுத்திக் கொள்வதும் எளிதாக இருக்கும். நம்மூர் பெண்களை காலையில் சேலையில் ஓட சொன்னால் எத்தனை பேர் அதை செய்வார்கள்? அவர்கள் உடல் ஒத்துழைக்குமா? ஆனால் நடக்க சொன்னால் நிச்சயம் நடப்பார்கள். இது உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்தும் எளிய வழி.
இதையும் படிங்க: வாக்கிங்கை விட 10 நிமிஷம் ஸ்பாட் ஜாகிங்ல நிறைய நன்மைகள்.. உண்மையில் எது பெஸ்ட்?
மற்ற நன்மைகள்:
நடைபயிற்சி தொடர்ந்து செய்வோரின் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். பல நாட்கள் இடைவிடாமல் ஒரு மணி நேரம் நடக்கும்போது கெட்ட கொழுப்புகள் குறையும். இதனால் இரதய ஆரோக்கியம் மேம்படும். வளர்சிதை மாற்றம் அதிகரித்து எடையும் குறையும். சர்க்கரை நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் ஆபத்து குறையும்.