- Home
- உடல்நலம்
- Pomegranate Peel : மாதுளை தோலை இனி தூக்கி எறியாதீர்கள்.. எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?
Pomegranate Peel : மாதுளை தோலை இனி தூக்கி எறியாதீர்கள்.. எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?
மாதுளை பழம் மட்டுமல்ல, மாதுளை பழத்தோலிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மாதுளை தோலில் நிறைந்திருக்கும் முக்கிய மருத்துவப் பயன்கள் குறித்து இங்கே காணலாம்.

Health Benefits of Pomegranate Peel
மாதுளை பழத் தோல்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாதுளை தோளில் எலாஜிக் அமிலம் மற்றும் பிளவனாய்டுகள் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எனப்படும் சரும செல்கள் சேதமடைவதை தடுத்து, சருமத்தை பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் செல்களின் மீள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் வடுக்கள், காயங்கள், தழும்புகளை குணப்படுத்தி சருமத்தை புத்துணர்வாக வைக்க உதவுகிறது. மாதுளை தோலை பொடி செய்து பால் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தினால் முகப்பரு, கரும்புள்ளிகள், வறண்ட சரும பிரச்சனைகள் தீரும். சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து இயற்கை மாய்ஸரைஸராக செயல்படும்.
சரும பிரச்சனைகளை தடுக்கும் மாதுளை தோல்
மாதுளை தோலில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சருமம் பொலிவுடன் காணப்படும். முன்கூட்டியே வரும் சுருக்கங்களை தடுத்து இளமையான தோற்றத்தை தக்க வைக்க உதவும். மாதுளை தோலில் பாலிபினால்கள் அதிகமாக இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மாதுளை தோலை டீயாகவோ அல்லது கஷாயமாகவோ செய்து குடிக்கும் பொழுது தொண்டைப்புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா மற்றும் தொற்றுக்களை குறைக்க உதவுகின்றன. செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கி வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகளையும் குறைக்கும்.
வயிறு/எலும்பு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மாதுளை தோல்
கல்லீரல் சுத்தப்படுத்தும் பண்புகளையும் மாதுளை தோல் கொண்டுள்ளது. இதில் இருக்கும் மினரல்கள் மற்றும் பிற சேர்மங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எலும்பு தசைகள் வளரவும், எலும்புகள் உடைதல், மூட்டு வலி, எலும்பு புறநோய் ஆகிய பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மாதுளை தோல் கொண்டு செய்யப்படும் தேநீர் இரத்த சர்க்கரை அளவையும், கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது. மாதுளை தோலில் புனிகலஜின் என்ற பாலிபீனால் உள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது. இது மார்பக, வாய், வயிறு புற்றுநோய் செல்கள் பரவுதை கட்டுப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மூளையில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், அல்சைமர் போன்ற மறதி நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகின்றன.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் மாதுளை தோல்
மாதுளை பழத் தோலில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை எடை குறைப்புக்கு உதவுகின்றன. கொழுப்பை கட்டுப்படுத்துவதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை வெகுவாக குறைகிறது. மாதுளை தோலை வெயிலில் நன்கு உலர்த்தி, காய வைத்து பொடியாக்கி உப்பு மற்றும் மிளகு சேர்த்து பல் துலக்கும் பொழுது பல்லில் ஏற்படும் இரத்த கசிவுகள் நீக்கப்படும். ஈறுகள் ஆரோக்கியம் மேம்படும். ஈறுகள் பலப்படும். வாய் துர்நாற்றத்தையும் இது போக்கும். மாதுளை தோலை கழுவி சுத்தப்படுத்தி உலர்த்தி பொடியாக்கி தேநீர், கஷாயம், ஃபேஸ் பேக் போன்ற பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
மாதுளை தோலை இனி தூக்கி எறியாதீர்கள்
அடுத்த முறை மாதுளை பழம் வாங்கினால் பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறியாமல், அதன் ஆரோக்கிய நன்மைகளை கருத்தில் கொண்டு, காய வைத்து பொடியாக்கி, கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாதுளை தோல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.