River Fish Benefits : ஆற்று மீன்கள் சாப்பிடலாமா? கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள்
கடல் மீன்களைப் போலவே ஆற்று மீன்களிலும் புரதங்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Health Benefits of River Fish
நம்மில் பெரும்பாலானவர்கள் ஆற்று மீன்களை விட கடல் மீன்களையே விரும்பி உண்கிறோம். ஆனால் ஆற்று மீன்களும் ருசிகரமானவை தான். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயப்பவை. கடல் மீன்களில் குறிப்பாக சால்மன், மத்தி, சூரை, கானாங்கெளுத்தி ஆகிய மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கும். கடல்வாழ் தாவரங்கள் மற்றும் சிறிய உயிரினங்களை உண்பதால் கடல் மீன்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆற்று மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும் புரதம், வைட்டமின்கள், பிற தாதுக்களின் சிறந்த ஆதாரமாக ஆற்று மீன்கள் விளங்குகிறது.
ஆற்று மீன்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
ஆற்று மீன்களில் காணப்படும் உயர்தரமான புரதம் திசுக்களின் வளர்ச்சி மற்றும் செல்களின் பழுது பார்ப்பிற்கு முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கடல் மீன்களை விட கொழுப்பு குறைவாக இருப்பதால் இது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆற்று மீன்களில் காணப்படும் வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. இதில் இருக்கும் பி குழுமத்தின் வைட்டமின்கள் உடலின் ஆற்றல் உற்பத்தி, நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவி புரிகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், செலினியம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசியமான தாதுக்கள் ஆற்று மீன்களில் நிறைந்துள்ளன. மீன்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் உதவுகின்றன.
தமிழ்நாட்டில் காணப்படும் பிரபலமான ஆற்று மீன்கள்
தமிழ்நாட்டில் காணப்படும் சில பிரபலமான ஆற்று மீன்களின் வகை குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம். ரோகு மீன்களில் புரதம், வைட்டமின் டி, குறைந்த அளவில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இது எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன. கட்லா மீன்களில் புரதம், குறைந்த கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், கால்சியம் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன். மேலும் தசை வளர்ச்சிக்கும் கட்லா மீன்கள் உதவுகின்றன. விரால் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (குறைந்த அளவில்), குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரதம் இருப்பதால் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. சிலர் விரால் மீனில் மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்புகின்றனர்.
கடல் மீன்கள் vs ஆற்று மீன்கள்
கெண்டை மீனில் புரதம், கால்சியம், பாஸ்பரசுடன் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது உடனடி ஆற்றலுக்கும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. ஜிலேபி மீனில் புரதம், வைட்டமின் பி12, செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்திக்கும், ஆற்றல் உற்பத்திக்கும் உதவுகிறது. கடல் மீன்களைப் போலவே ஆற்று மீன்களும் ருசிகரமானவை. இருப்பினும் கடல் மீன் அளவிற்கு ஆற்று மீன்களில் உப்பு தன்மை இருக்காது. எனவே இதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் கூட போகலாம். இருப்பினும் மீன்களை நாம் எப்படி சமைக்கிறோம் என்பதை பொறுத்து அதன் ருசி அமைகிறது. மேலும் மீன்களை சமைக்கும் முறையானது, அதன் ஊட்டச்சத்து மதிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆற்று மீன்களை சமைக்கும் முறை
மீன்களை அதிக மசாலாக்கள் சேர்த்து எண்ணெயில் பொரித்து உண்பதற்கு பதிலாக வேகவைத்து குழம்பாக வைத்து அல்லது கிரில் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமான வழியாகும். அல்லது மீனை நன்றாக வேக வைத்து முட்கள் இல்லாமல் சதைப்பகுதியை மற்றும் உதிர்த்து புட்டு அல்லது பொரியல் போல செய்து சாப்பிடலாம். இதுவும் ஆரோக்கியமான முறையாகும். மேலும் மீன்கள் சுகாதாரமான சூழலில் இருந்து தான் பிடிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம். எந்த வகை மீனாக இருந்தாலும் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதை சாப்பிடுவதை கைவிட வேண்டும். ஆற்று மீன்களும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான மீன்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.