- Home
- உடல்நலம்
- உணவு
- Fish Foods : இந்த 9 வகையான மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.. கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
Fish Foods : இந்த 9 வகையான மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.. கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
மீன்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 9 மீன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Health Benefits of Eating Fish Foods
மீன்கள் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், வைட்டமின் டி மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியம் முதல் மூளை வளர்ச்சி வரை மீன் உணவுகள் பல நன்மைகளைத் தருகின்றன. நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய மீன்களின் வகைகள் குறித்தும், அவற்றின் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சால்மன்/கிழாங்கு மீன் (Salmon)
சால்மன் மீன்களில் EPA மற்றும் DHA போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பு அளவை குறைப்பதால் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மூளைக் கோளாறுகள் ஆகியவை வராமலும் தடுக்கிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி-யை வழங்குகிறது. உடல் திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவையான உயர்தர புரதத்தை வழங்குகிறது. சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் செல் சேதத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
கானாங்கெளுத்தி மீன் (Mackerel)
சால்மனைப் போலவே கானாங்கெளுத்தி மீனிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புகளை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதில் உள்ள வைட்டமின் டி ஆற்றல் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. உலகில் இந்த மீன் மிக முக்கிய மீனாக கருதப்படுகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் காரணமாக மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. இதில் உள்ள செலினியம் என்னும் தாது தைராய்டு செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
மத்தி மீன் (Sardines)
அளவில் சிறியதாக இருந்தாலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து மீனாக மத்தி விளங்குகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சோகையை தடுக்க உதவும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்திருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புகளை நீக்குகிறது.
நெத்திலி மீன் (Anchovies)
மத்தி மீன்களைப் போலவே அளவில் சிறயதாக இருந்தாலும் நெத்திலி மீன்கள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி3(நியாசின்) உடலில் ஆற்றலை அதிகரிக்கவும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் உதவும். கண்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் கருவாடு அதிக சுவை கொண்டது. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றிம் தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் நெத்திலி கருவாடை வைத்து அவியல் செய்து சாப்பிடுவது வழக்கம்.
சூரை மீன் (Tuna)
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் நிறைந்தது. தசைகளை வலுவாக்கும். எடை குறைப்பிற்கு உதவும். சூரை மீனின் கருவாடு மாசிக் கருவாடு என அழைக்கப்படுகிறது. இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டால் கருப்பை பலப்படும். ஆண்களுக்கு விந்துவின் தரம் அதிகரிக்கும். இது உடலுக்குத் தேவையான புரதத்தை வழங்குகிறது. ஆற்றல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு முக்கியமானது. சூரை மீன்களின் வகை மற்றும் வாழ்விடத்தைப் பொறுத்து இதன் அளவு மாறுபடும். சில வகையான சூரை மீன்களில் பாதரச அளவு அதிகமாக இருக்கலாம் என்பதால் இதை கவனத்துடன் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
வஞ்சிரம் மற்றும் சங்கரா மீன்
வஞ்சிரம் மற்றும் சங்கரா ஆகிய இரண்டு மீன்களிலும் புரதச்சத்து அதிகம். வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இந்த மீன்களை தொடர்ந்து சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் வலுவாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. இதன் காரணமாக இதய ஆரோக்கியம் மேம்படும். மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாது. உடல் எடை குறைப்பிற்கு உதவும்.
முரல் மற்றும் விரால் மீன்
முரல் மற்றும் விரால் மீன்களில் புரதச்சத்து அதிகம். வைட்டமின் பி12 நிறைந்தது. தசைகளை வலுவாக்கும். நரம்பு மண்டலம் வலப்பெறும். மீன்கள் பொதுவாக கொழுப்பு குறைந்த உணவாகும். வாரம் இரு முறையாவது மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்ற இறைச்சிகளைக் காட்டிலும் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் நீண்ட வாழ்வைப் பெறலாம்.