வாரத்தில் ஒரு முறை இந்த மீனை குழம்பு செய்து சாப்பிட்டால் தலை முதல் பாதம் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

அசைவ உணவுகளில் மீனுக்கு தனி இடம் உண்டு. அதன் சுவை மட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளுக்காக மக்கள் அதை விரும்பி வாங்குவர். மீனில் உள்ள சத்துக்கள் இதயத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது. பெரும்பாலானோர் சால்மன், கானாங்கெளுத்தி ஆகியவை தான் அதிகம் வாங்குகிறார்கள். இது விலை மலிவு; ருசியோ அபாரம். இது தவிர ஊழி, இறால், கட்லா, வஞ்சரம் உள்ளிட்ட பல மீன்களுக்கும் கிராக்கி உள்ளது. இந்தப் பதிவில் உச்சி முதல் பாதம் வரை அதிக நன்மைகளை தரக் கூடிய மீன் வகையும், அதன் ரெசிபியும் காணலாம்.

இந்த மீன் ஊட்டச்சத்துக்களின் பெட்டகம் என்றுதான் சொல்ல வேண்டும். பல நோய்களை விரட்டவும், வரும் முன் காக்கவும் தேவையான சத்துக்கள் இதில் உள்ளன. டுனா என அழைக்கப்படும் இந்த சூரை மீனில் கால்சியம் சத்து அதிகம். எலும்புகளை வலுவாக்குவதால் வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு பிரச்சனைகளை தவிர்க்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு எலும்புகளையும் உறுதியாக்கும்.

மீன் வகைகளில் ட்ரவுட், சால்மன், டுனா, கானாங்கெளுத்தி ஆகிய மீன் வகைகள் கொழுப்பு நிறைந்தவையாக இருக்கும். இவை வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்ய உதவும். சூரை மீனும் கால்சியம் சத்தை அதிகம் கொண்டதுதான். இதனை வாரம் ஒரு முறையாவது சமைத்து உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை கர்ப்பிணிகளும் உண்ணலாம். எந்த பாதிப்பும் வராது.

வயதானவர்கள் ஆரோக்கியம்

சூரை மீன் வயதானவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கும். சூரை மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்து, வைட்டமின் டி, வைட்டமின் பி2 ஆகிய சத்துக்கள் இதய நோய், பக்கவாதம், மூளை சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும். சூரை மீனில் இருக்கும் வைட்டமின் டியை உறிஞ்சும் பண்பு எலும்புகள், பற்களை வலுவாக்க உதவுகிறது.

மற்ற நன்மைகள்

டுனா மீன் சருமப் பிரச்சனைகளைத் தடுக்கக் கூடியது. வயதாகும் செயல்முறையை தாமதப்படுத்தி சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகிறது. இந்த மீன் உண்ணும்போது மன அழுத்தம் குறைவதால் முடி உதிர்வும் குறைக்கப்படுகிறது. கண் பார்வைக் குறைபாடு இருப்பவர்களுக்கு இந்த மீன் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

டுனா மீன் குழம்பு செய்முறை

முதலில் அரைக் கிலோ டுனா மீனை வாங்கி சுத்தம் செய்யுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு கலந்து ஊற வைக்க வேண்டும். நல்ல சின்ன வெங்காயம் 10 முதல் 14 நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். ஒரு தக்காளி நறுக்கி வைத்துகொள்ளுங்கள். புளியை ஊற வைத்து புளி தண்ணீர் தயார் செய்து கொள்ளுங்கள்.

மசாலாவாக 1 டீஸ்பூன் வெந்தயம், 10 காய்ந்த மிளகாய், 3 டீஸ்பூன் மல்லி விதைகள், கொஞ்சம் கறிவேப்பிலை, 2 டீஸ்பூன் கருப்பு மிளகு ஆகியவற்றை அரைத்து கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் விட்டு அது காய்ந்தபின், அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். அது வதக்கியதும், மீனை அதில் போட்டு கிளறி கொஞ்சம் மசாலா மீனில் ஒட்டிய பின் தேவையான அளவு தண்ணீர் விடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள். இதை நன்கு கொதிக்க விட்டு மீன் வெந்ததும் இறக்கினால் ஆரோக்கியமான டுனா மீன் குழம்பு ரெடி!