Parenting Tips : குழந்தைகளின் எலும்புகளை உறுதியாக்கும் '3' சத்துக்கள் இதுதான்
உங்கள் குழந்தைகள் வளர வளர அவர்களின் எலும்பும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

குழந்தைகளின் எலும்புகளை உறுதியாக்க
குழந்தை பருவத்திலேயே எலும்பு ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருந்தால் மட்டுமே, வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். எனவே, குழந்தை பருவம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. மேலும் இந்த பருவத்தில் தான் குழந்தைகள் கீழே விழுவது, ஓடுவது போன்ற செயல்களை செய்வதால், காயங்கள், எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எலும்பு முறிவு எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே, பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
கால்சியம் :
கால்சியம் சத்து தான் தசைகளை வலுப்படுத்தும், எலும்புகளை வலுவாக வைக்கவும் உதவும். எனவே, குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு தினமும் பால், பச்சை காய்கறிகள், பாதாம் மற்றும் முழு தானியங்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு கொடுங்கள். ஒரு கப் பாலில் 300 மி.கி கால்சியமும், ஒரு கப் தயிரில் 400 மி.கி கால்சியம் உள்ளது.
வைட்டமின் டி;
வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது. உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்பு பலவீனமாகிவிடும். வைட்டமின் டி தான் உடலில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளது. முட்டை, மீன், பால், கொழுப்பு நிறைந்த மீன் போன்றவற்றில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, காலையில் சூரிய ஒளியில் நிற்பதன் மூலம் அதிலிருந்து வைட்டமின் டி-யை பெறலாம். மேலும் மருத்துவரின் ஆலோசனை பேரில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
சீரான உணவுகள் சாப்பிடுங்கள்;
குழந்தைகளின் எலும்புகள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதங்கள் ரொம்பவே அவசியம். புரதங்கள் தான் எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே பருப்பு வகைகள், முட்டை, கோழி, மீன் போன்றவற்றை அவர்களுக்கு சாப்பிட கொடுங்கள். ஏனெனில் அவற்றில் புரதங்கள் நிறைந்துள்ளன. ஆனால் குழந்தைகளின் வயதை பொறுத்து சரியான அளவில் புரதம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல வைட்டமின் கே-வும் எலும்பை உறுதியாக்கும். பிரக்கோலி முட்டை கோஸ் பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது தவிர மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற பிற தாதுக்களும் எலும்பு வளர்ச்சிக்கு அவசியம்.
உடல் செயல்பாடுகள் அவசியம்
குழந்தைகளின் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா பானங்கள், காஃபின், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகள் கொடுங்கள். இதுதவிர, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க ஓடுதல், குதித்தல், விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்துங்கள் இதனால் அவர்கள் எலும்பு வலுவாகும்.
இந்த தவறு பண்ணாதீங்க!
குழந்தைகள் ஒரே இடத்தில் இருந்தால் அவர்களின் எலும்பு மற்றும் தசைகள் பலவீனமடைந்து விடும். எனவே குழந்தைகளை டிவி, மொபைல் ஃபோனில் இருந்து விலகி வையுங்கள். பிற செயல்களில் ஊக்குவியுங்கள்.