- Home
- Lifestyle
- Baby Foods : குழந்தைகள் சாப்பிடும் தானிய உணவுகள் பாதுகாப்பானது இல்லையா? ஆய்வுகள் சொல்வது என்ன?
Baby Foods : குழந்தைகள் சாப்பிடும் தானிய உணவுகள் பாதுகாப்பானது இல்லையா? ஆய்வுகள் சொல்வது என்ன?
இந்தியாவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான செர்லாக் தயாரிப்புகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Nestle Baby Products Sugar Complaints
நெஸ்லே தயாரிப்புகள் உலக அளவில் மிக பிரபலமானவை. நெஸ்லே தயாரிப்புகளை சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு செர்லாக் என்னும் தானிய தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. ஆனால் இந்த தயாரிப்புகளில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்கப்படும் பொருட்களில் குழந்தை தயாரிப்பு பொருட்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நெஸ்லே தாயரிப்புகள்
ஐரோப்பிய அமைப்பான IBFAN (Baby Food Action Network) நடத்திய ஆய்வில், இந்தியாவில் விற்கப்படும் செர்லாக்கை ஒருமுறை குழந்தைக்கு ஊட்டுகையில் 2.2% சர்க்கரை உடலுக்குச் செல்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம், பிரிட்டன், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் இதே செர்லாக் பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. பப்ளிக் ஐ (Public Eye) மற்றும் இன்டர்நேஷனல் பேபி ஃபுட் ஆக்ஷன் நெட்வொர்க் இணைந்து ஆப்பிரிக்கா, லத்தீன், ஆசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் விற்கப்படும் குழந்தை உணவுப் பொருட்களின் மாதிரிகளை பெல்ஜிய ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
செர்லாக்கில் அளவுக்கு மீறி சர்க்கரை சேர்ப்பு
ஆய்வின் முடிவில் இந்தியா, ஆப்பிரிக்கா லத்தீன், அமெரிக்க நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேவின் குழந்தைகளுக்கான பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் உடல் பருமன், நாள்பட்ட நோய்களை தடுக்கும் சர்வதேச வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. செர்லாக் இந்தியாவில் மிகப் பிரபலமான குழந்தைகள் உணவுப் பொருள் ஆகும். 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு விற்பனையாகி சாதனை படைத்தது. அந்த அளவிற்கு மக்கள் இந்த உணவு மீது நம்பிக்கை வைத்து வாங்கி வருகின்றனர். ஆனால் இதில் அளவுக்கு மீறி சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் இரட்டை வேடம்
வளர்ந்த நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆறு மாத குழந்தைகளுக்கான நெஸ்லேவின் தயாரிப்புகளில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை. அதேசமயம் தாய்லாந்து, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ஐந்து முதல் ஆறு கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி நைஜல் ரோலின்ஸ் கூறியதாவது, “நெஸ்லே நிறுவனத்தின் இந்த இரட்டை வேடத்தை நியாயப்படுத்த முடியாது. சுவிட்சர்லாந்தில் இந்த தயாரிப்புகளில் நெஸ்லே சர்க்கரை சேர்க்கவில்லை.
நெஸ்லே தரப்பு விளக்கம்
ஆனால் குறைந்த வள அமைப்பு கொண்ட நாடுகளில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உணவுப் பொருட்களில் இவ்வாறு அளவுக்கு மீறி சர்க்கரை சேர்ப்பது ஆபத்தானது. இது குழந்தைகளை இந்த உணவுப் பழக்கத்திற்கு அடிமையாக்கும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள நெஸ்லே இந்தியாவின் செய்தி தொடர்பாளர், “ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை 30% வரை குறைத்துள்ளோம். எங்களுடைய சுவை, பாதுகாப்பு, தரம் ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் எங்கள் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறோம். சர்க்கரையின் அளவை மேலும் குறைத்து தயாரிப்புகளை புதுமைப்படுத்தி மறு சீரமைக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
செர்லாக் பற்றி நிபுணர்கள் கருத்து
ஏழை நாடுகளுக்கு ஒன்று, பணக்கார நாடுகளுக்கு வேறொன்று என்று இந்த நிறுவனம் செயல்படுவதாக நெஸ்லே நிறுவனம் மீதும் பலரும் குற்றச்சாட்டியுள்ளனர். இளம் வயதிலேயே அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளை சாப்பிடுவது குழந்தைகளுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் சர்க்கரை சேர்க்கப்படுவதை ஐக்கிய நாடுகளின் சபையின் முகமைகளும் தடை செய்துள்ளன. செர்லாக்கில் சேர்க்கப்படும் இந்த சர்க்கரை குழந்தைகளை சுவைக்கு அடிமையாக்கி, மீண்டும் மீண்டும் சர்க்கரை சேர்த்த உணவுகளை தேட வைத்து அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் சமைத்த உணவுகளே சிறந்தது
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க விரும்பினால் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் சத்தான உணவுகளை வழங்குவதே சிறந்தது. ராகி கூழ், வேகவைத்த ஆப்பிள், பழக்கூழ், பருப்பு சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கு, காய்கறிகள் போன்றவற்றை சுகாதாரமான முறையில் வீட்டிலேயே தயாரித்து கொடுப்பது அவர்களின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும். குறிப்பிட்ட வயதிற்குள் அனைத்து வகையான திட உணவுகளையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது நல்லது.