வயதானவர்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் வாக்கிங் போகனும் தெரியுமா?
ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் நடைபயிற்சி செய்வது வயதானவர்களின் மூளையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

How Many Days Old Age People Should Walk Per Week
நடை பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மூளை செயல்பாட்டிற்கும் உதவுகிறது. நடப்பது நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு அவசியமான மூளையின் ஹிப்போகேம்பஸின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்காக நாள்தோறும் மணிக்கணக்கில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு வாரத்தில் மூன்று நாட்கள், வெறும் 40 நிமிடங்கள் நடந்தால் கூட போதும். இது உங்களுடைய அறிவாற்றலை மேம்படுத்தக் கூடும்.
ஆய்வில் தகவல்
தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்ட ஆய்வுகளில் டிமென்ஷியா இல்லாத 120 வயதானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இருகுழுக்களாக பிரிக்கப்பட்டனர். இக்குழுவினர் அமர்ந்த நிலையில் வாழ்க்கை முறை கொண்டவர்கள். ஓராண்டு இருகுழுவினரையும் கண்காணிப்பு செய்ததில் ஏரோபிக் உடற்பயிற்சி செய்த ஒருவரின் ஹிப்போகேம்பஸ் அளவு சராசரியாக 2% அதிகரித்திருப்பது தெரிய வந்தது. பயிற்சிகள் எதுவும் செய்யாத மற்றொரு குழுவின் ஹிப்போகேம்பஸ் அளவு குறைவாகவே காணப்பட்டது. இந்த ஆய்வில் கற்றல், நினைவாற்றலுடன் தொடர்புடைய மூளையில் உள்ள நியூரோட்ரோபிக் காரணி (BDNF) அளவுகளுடன் ஹிப்போகேம்பஸ் அளவுகள் தொடர்பு கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
மூளை செயல்பாடு
ஒருவருக்கு வயதாகும் போது அவருடைய நினைவாற்றல் கற்றல் திறன் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால் மூளையின் ஹிப்போகேம்பஸ் அளவு சுருங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே வயதாகும் போது நினைவாற்றல் குறைந்து, புதிய நினைவுகளை உருவாக்குவதில் சிரமப்படுகின்றனர். இது தவிர நாள்பட்ட மன அழுத்தம், மோசமான தூக்கம், அமர்ந்த வாழ்க்கை முறை போன்றவையும் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்துவதில் தொடர்பு கொண்டது. ஆனால் வழக்கமான உடற்பயிற்சி நடைபயிற்சி, ஏரோபிக் செயல்பாடுகள், ஆரோக்கியமான உணவு, மனநிலை சீராக இருப்பது போன்றவை ஹிப்போகாம்பஸ் சுருக்கத்தை தாமதப்படுத்துவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
எவ்வளவு நாட்கள் நடக்க வேண்டும்?
நாள்தோறும் 40 நிமிடம் நடைபயிற்சி செய்வது உங்களுடைய மூளையின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடும். இது நல்ல ஏரோபிக் செயல்பாடு. இந்த 40 நிமிடங்களை 20 நிமிடங்களாக பிரித்து காலை, மதியம், மாலை எனத் தனித்தனி அமர்வுகளாக நடக்கலாம். வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் நடந்தாலும் போதுமானது என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் முடிவில் கூறியுள்ளனர். உங்களால் தினமும் நடக்க முடிந்தால் அதுவும் நன்மைக்கே!