Dragon Fruit : டிராகன் ப்ரூட் சாதாரணமா நினைக்காதீங்க! பெண்கள் கண்டிப்பா சாப்பிடனும்
டிராகன் பழம் பெண்களுக்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Health Benefits of Dragon Fruit for Women
டிராகன் பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். எனவே, பெண்கள் இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிட வேண்டுமென்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், டிராகன் பழத்தில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் பெண்களின் பல பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. சரி இப்போது டிராகன் பழத்தை பெண்கள் ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரும்புச்சத்து குறைபாடு :
பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ஏனெனில், மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பின் காரணமாக பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. டிராகன் பழத்தில் இரும்புச்சத்து கணிசமான அளவில் உள்ளதால் இது ரத்த சோகையை தடுத்து, உடல்ல்ய் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.
வலுவான எலும்புகள் :
டிராகன் பழத்தில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் அவை எலும்புகளை வலுவாக்கும். குறிப்பாக பெண்கள் மெனோபாஸ் அடையும் நிலையில் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) ஏற்படும் அபாயம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் எலும்பை ஆரோக்கியமாக வைக்க மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமான ஆரோக்கியம் :
டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அது செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவும். இதனால் மலச்சிக்கல், வீக்கம் பிரச்சனைகள் வருவது குறையும். ஆரோக்கியமாக இருந்தால் ஊட்டச்சத்துக்கள் சீராக உறிஞ்சப்படும் மற்றும் குடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
டிராகன் பழத்தில் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் தொற்று நோய்கள் மற்றும் பருவ கால நோய்களிலிருந்து உடல் பாதுகாக்கப்படும்.
சருமத்திற்கு நல்லது :
டிராகன் பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுக்க உதவும். மேலும் இது சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவும். இதனால் சருமத்தின் நெகிழ்ச்சிதன்மை அதிகரிக்கும்.
எடை இழப்புக்கு உதவும் :
இந்த பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாகவும். முக்கியமாக நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைந்த உணர்வைத் தரும் மற்றும் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை தடுக்க உதவும்.
கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?
டிராகன் பழத்தில் ஃபோலேட் உள்ளதால் இது கர்ப்பிணிகளுக்கு தேவையான ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை பிரச்சனையை தடுக்க உதவும்.
எனவே பெண்களே பழக்கடைகளில் எளிதாக கிடைக்கும் இந்த பழத்தை நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக வாங்கி சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.