- Home
- உடல்நலம்
- Food : இந்த 5 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டுறாதீங்க.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.!
Food : இந்த 5 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டுறாதீங்க.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.!
சில உணவுகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அதன் ஊட்டச்சத்துக் குறைவதுடன், சில சமயங்களில் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவித்து உணவு விஷமாக மாறலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 5 உணவுகள்
தற்போதைய காலத்தில் உணவை தேவைக்கு அதிகமாக சமைத்து அதை குளிர்சாதன பெட்டியில் திணித்து விடுகிறோம். மீண்டும் தேவைப்படும் நேரத்தில் அதை எடுத்து சூடு படுத்தி சாப்பிடும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கிறோம். ஆனால் இவ்வாறு செய்வது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போதோ அல்லது நீண்ட நேரம் வெளியில் வைத்திருக்கும் போதோ உணவில் பாக்டீரியாக்கள் வளரத் தொடங்குகின்றன. இதை மீண்டும் சூடுபடுத்தும் பொழுது அது விஷமாக மாறி ஒவ்வாமையை ஏற்படுத்தி உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். அப்படி மீண்டும் சூடு படுத்தி சாப்பிடவே கூடாத ஐந்து உணவு வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சமைத்து நீண்ட நேரம் வெளியிலோ அல்லது குளிர்சாதன பெட்டிகளோ வைத்துவிட்டு அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது. இவ்வாறு வைத்திருக்கும் பொழுது அதில் ‘க்ளோஸ்ட்ரியம் பொட்டுலினம்’ என்கிற பாக்டீரியா வளர வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியா பொட்டுலிசம் என்கிற அரிய, தீவிரமான உணவு விஷத்தை ஏற்படுத்தும். மீண்டும் சூடு படுத்தும் பொழுது பாக்டீரியாக்களை முழுமையாக அழிக்க முடியாது. எனவே உருளைக்கிழங்கு உணவுகளை சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. உருளைக்கிழங்கை பிரஷ்ஷாக வாங்கி வந்து அதை நறுக்கி சூடாக சமைத்து அந்த வேளை மட்டும் சாப்பிட வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தாலும், நீண்ட நேரம் கழித்து மீண்டும் சூடு படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அரிசி
உருளைக்கிழங்கை போலவே அரிசியும் பாக்டீரியாக்கள் வளர ஏதுவான இடமாகும். சமைத்த அரிசியை நீண்ட நேரம் வைத்திருக்கும் பொழுது அதில் பேசிலஸ் செரஸ் சென்ற பாக்டீரியாவின் ஸ்போர்கள் வளரக்கூடும். இந்த பாக்டீரியா விஷத்தன்மையை உற்பத்தி செய்து வாந்தி அல்லது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். சமைத்த உணவை நீண்ட நேரம் கழித்து மீண்டும் சூடு படுத்தும் பொழுது இந்த ஸ்போர்கள் மற்றும் அவற்றின் நச்சுக்களை முழுமையாக அழிக்க முடியாது. எனவே சமைத்த அரிசியை உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு நாளுக்கு மேல் வைத்து மீண்டும் சூடு படுத்துவதை தவிர்க்க வேண்டும். அன்றைக்கு சமைத்த சாதத்தை அன்றே சாப்பிட்டு விட வேண்டும். தேவையான அளவு அரிசியை சமைத்து அன்றைக்கே தீர்த்து விட முயற்சி செய்யுங்கள்.
சிக்கன்
சிக்கனில் அதிக அளவு புரதம் உள்ளது. இதை மீண்டும் சூடுபடுத்தும் பொழுது இந்த புரதத்தின் அமைப்பு மாறி செரிமானத்திற்கு கடினமாகலாம். சில சமயங்களில் சிக்கனை மீண்டும் சூடு படுத்தும் பொழுது பாக்டீரியா வளர்ச்சியும் ஏற்படலாம். குறிப்பாக சிக்கன் சரியாக சமைக்கப்படாமல் இருந்திருந்தால் மீண்டும் சூடு படுத்தும் பொழுது அது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி உள்ளிட்டவற்றை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது அதில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஒருவேளை சூடு படுத்த நேர்ந்தால் குறைந்த வெப்பநிலையில் முழுமையாக சூடாகும் வரை சூடு படுத்தி அதன் பின்னரே சாப்பிட வேண்டும்.
காளான்
அதேபோல் காளான்களில் புரதச்சத்து நிறைந்துள்ளது. சமைத்த காளான்களை மீண்டும் சூடு படுத்தும் பொழுது அவற்றின் புரத அமைப்பு சிதையத் தொடங்கும். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் சரியாக சமைக்கப்படாத காளான்களில் பாக்டீரியாக்கள் வேகமாக வளர வாய்ப்புள்ளது. முடிந்தவரை காளான் உணவுகளை சமைத்த உடனையே சாப்பிட்டு விடுவது நல்லது.
கீரைகள் மற்றும் பீட்ரூட்
அதேபோல் கீரைகள் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளில் இயற்கையாக நைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. இவற்றை மீண்டும் சூடு படுத்தும் பொழுது நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாற்றப்படலாம். இது உடலில் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களாக (நைட்ரோசமைன்கள்) மாறி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே கீரைகள் மற்றும் பீட்ரூட் போன்ற நைட்ரேட் நிறைந்த உணவுகளை மீண்டும் சூடு படுத்தக் கூடாது.
பொதுவான ஆலோசனை
உணவுகளை சூடு படுத்துவதை தவிர்க்க, சமைக்கும் போது தேவையான அளவு மட்டுமே சமைக்க வேண்டும். மீதமுள்ள உணவுகளை உடனடியாக காற்று புகாத கொள்கலனின் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும். மீண்டும் சூடு படுத்தும் பொழுது உணவை முழுமையாக சீராக சூடு படுத்துவதை உறுதி செய்யவும். உணவின் வாசனை, நிறம், அமைப்பு மாறினால் உங்களுக்கு உணவின் தரம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் தோன்றினால் அதை தவிர்த்து விடுவது நல்லது.