Food For Children : எந்த வயது குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்?
குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப உணவு மாறுபடும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வேறுபடும். குழந்தைகளின் வயது மற்றும் அதற்கேற்ற உணவுப் பழக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

0-6 மாதங்கள் மற்றும் 6-12 மாதங்கள்
இந்த வயது குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. தாய்ப்பாலில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் உள்ளன. தாய்ப்பால் கிடைக்காத பட்சத்தில், மருத்துவரின் அறிவுரைப்படி ஃபார்முலா பால் கொடுக்கலாம். தாய்ப்பாலுடன், திட உணவுகளை அறிமுகப்படுத்த ஆரம்பிக்கலாம். முதலில், எளிதில் செரிக்கக்கூடிய மற்றும் மசித்த உணவுகளைக் கொடுக்கலாம். வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள், அரிசி கஞ்சி, ராகி கஞ்சி, பருப்பு தண்ணீர் போன்றவற்றை கொடுக்கலாம்.
1-3 வயது மற்றும் 3-5 வயது
இந்த வயதில், குழந்தைகளை குடும்பத்துடன் அமர வைத்து சாப்பிட பழக்க வேண்டும். சத்தான மற்றும் சமச்சீரான உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முட்டை, இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். 3 முதல் 5 வயது என்பது குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயதாகும். எனவே முழு நாளைக்குத் தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவற்றை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். ஜங்க் உணவுகளை சிற்றுண்டியாக கொடுக்காமால் பழங்கள், காய்கறிகள் அல்லது உலர் பருப்புகளைக் கொடுக்கலாம்.
5 வயதுக்கு மேல்
இந்த வயதில், குழந்தைகள் பெரியவர்களைப் போலவே சாப்பிடலாம். பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இருப்பினும், சத்தான உணவுகள் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இனிப்புகள், துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை துவங்க வேண்டியது அவசியம்.
பொதுவான குறிப்புகள்
குழந்தைகளுக்கு போதுமான தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். அவசரமாக விழுங்காமல் உணவை மெதுவாகவும், நன்றாக மென்றும் சாப்பிட பழக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை சத்தான முறையில் சமைக்க முயற்சி செய்யுங்கள். உடலுக்கு தீங்கு தரும் உணவுகளை கொடுப்பதை சிறு வயது முதலே தடுத்து விடுங்கள். குழந்தைகளை அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிட வைக்க முயற்சி செய்யுங்கள். ‘எனக்கு இது பிடிக்காது’ என்று எந்த உணவையும் வெறுக்க கற்றுக் கொடுக்காதீர்கள். குழந்தைகள் வெறுக்கும் உணவை நீங்கள் சாப்பிட்டு முன்னுதாரணமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
மருத்துவ ஆலோசனை தேவை
மேலே சொல்லப்பட்ட தகவல்களில் குழந்தைகளுக்கான உணவு முறை குறித்து பொதுவான வழிகாட்டுதல்களே கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் இது வேறுபடலாம். குழந்தையின் வளர்ச்சி மற்றும் உடல்நலன் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மருத்துவரை அணுகவும்.