வயதுக்கேற்றபடி குழந்தைகளின் வளர்ச்சி அமையாதது ஏன், அவர்கள் வளர என்னென்ன செய்ய வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.

இன்றைய காலத்தில் சில குழந்தைகள் வளர்ச்சி குறைவாக காணப்படுகிறார்கள். முந்தைய தலைமுறையினரை விட அல்லது அவர்களுக்கு இணையான வயதுடைய மற்ற குழந்தைகளை விடவும் வளர்ச்சியும், உயரமும் குறைவாக இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் 6ஆம் வகுப்பு போல தோற்றமளிக்க என்ன காரணம்? அதை எப்படி சரி செய்ய என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு

போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். எல்லாச் சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவு கிடைக்காதது முக்கிய காரணம். உங்களுடைய குழந்தை உயரமாக வளர்வதற்கு புரதம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் அவசியம். கண்டிப்பாக காலை உணவை உண்ண வேண்டும். பள்ளி போகும் குழந்தைகள் காலை உணவைத் தவிர்ப்பார்கள். அது முற்றிலும் தவறு.

தவிர்க்க வேண்டிய உணவு;

சிப்ஸ், சர்க்கரை பானங்கள், வறுத்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

உங்களுடைய குழந்தைக்கு ஊட்டச்சத்தான உணவுகள் கொடுத்தும் வளர்ச்சி பெறவில்லை என்றால், அது ஹார்மோன் ஏற்றத்தாழ்வாக இருக்கலாம். உடலில் உள்ள தலைமை சுரப்பியான பிட்யூட்டரி சுரப்பி தான் குழந்தைகள் உயரமாக வளர காரணம். உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மன அழுத்தம் காணப்பட்டால் அது வளர்ச்சி ஹார்மோன் சுரப்பை தடுக்கும்.

முன்கூட்டிய பருவமடைதல்:

குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைந்தால் அவர்கள் வளர்ச்சி தடைபடும். அவர்களுடைய எலும்புகளின் வளர்ச்சித் தட்டுகள் முன்பே மூடப்படும்.

உடற்செயல்பாடு

முந்தைய தலைமுறை குழந்தை ஓடியாடி விளையாடுவார்கள். ஆனால் இந்தத் தலைமுறை செல்போன்களில் மூழ்கிவிட்டார்கள். ஓடுயாடி விளையாடுதல், மரம் ஏறுதல் போன்ற வெளிப்புற விளையாட்டுகள் வளர்ச்சியைத் தூண்டும். வெளியே சென்று விளையாடும்போது எலும்பு வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் கிடைக்கும்.

தூக்கமின்மை

இரவு ஆழ்ந்து தூங்கும்போதுதான் வளர்ச்சி ஹார்மோன் சுரக்கும். இன்றைய குழந்தைகள் செல்போனில் வீடியோ பார்ப்பது, விளையாடுவது என இரவில் விழித்திருக்கிறார்கள். இதன அவர்களுடைய வளர்ச்சி ஹார்மோன் சரியாக வேலை செய்யாமல் போய்விடுகிறது.

மரபணு

குழந்தைகள் வளராமல் குட்டையாக இருப்பதற்கு அவர்களுடைய மரபணு காரணமாக இருக்கலாம். இது அவர்களுடைய பரம்பரையின் பண்பில் இருந்து வந்ததாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. சில நேரங்களில் பெற்றோர் உயரமாக இருந்தாலும், குழந்தைகள் குட்டையாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு மோசமான உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, நாள்பட்ட நோய்கள், மன அழுத்தம் போன்றவை காரணமாக இருக்கலாம்.

குழந்தைகள் வளர என்ன செய்யலாம்?

சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். தினமும் குழந்தைகள் சாப்பிடும் உணவில் புரதச்சத்து அவசியம் இருக்க வேண்டும். முட்டை, பால், பருப்பு வகைகள் அத்துடன் பழங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டும். ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு நாளும் அவருடைய தூக்கத்தை சரியாக கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். தினமும் 8 மணி நேரம் குழந்தைகள் உறங்குவதை உறுதி செய்யுங்கள்.

வீட்டிற்குள்ளே இருப்பதை விட வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள். பள்ளிகளில் ஏதேனும் விளையாட்டுகளில் சேர்ந்து திறமைகளை வளர்த்துக் கொள்ள உற்சாகப்படுத்துங்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் வைட்டமின் குறைபாடு இருக்கிறதா? என சோதித்து அதற்கு ஏற்ற உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். இது தொடர்பாக மருத்துவரிடம் ஒரு முறை கலந்த ஆலோசிப்பது நல்லது.