- Home
- உடல்நலம்
- Eggs : நாட்டுக்கோழி முட்டை vs பிராய்லர் கோழி முட்டை; எந்த முட்டைல ஊட்டச்சத்து அதிகம்? அறிவியல்ரீதியான உண்மை
Eggs : நாட்டுக்கோழி முட்டை vs பிராய்லர் கோழி முட்டை; எந்த முட்டைல ஊட்டச்சத்து அதிகம்? அறிவியல்ரீதியான உண்மை
நாட்டுக்கோழி முட்டைக்கும் பிராய்லர் கோழி முட்டைக்கும் ஊட்டச்சத்துக்களில் வேறுபாடு உள்ளதா? என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
ஊட்டச்சத்துகளின் பொக்கிஷம் போன்றது முட்டை. ஒரு பெரிய முட்டையில் கிட்டத்தட்ட 6 முதல் 7 கிராம் புரதம் இருக்கும். இது தசைகளின் மீட்சி, வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையில் 9 வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, டி, ஈ, பி12, கோலின், லுடீன், ஜியாக்சாந்தின், நிறைவுறா கொழுப்புகள் இருக்கின்றன.
மஞ்சள் கருவானது மூளை, கண் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு. வெள்ளைக் கரு கொழுப்பு இல்லாத புரதம் கொண்டது. தசைகள், மனநலம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஏற்றது. ஆனால் பழுப்பு நிறமுள்ள நாட்டுக் கோழி முட்டை, வெள்ளை நிறம் கொண்ட பிராய்லர் கோழி முட்டை இதில் எது ஊட்டச்சத்துகள் அதிகம் கொண்டது? உண்மையாகவே வெள்ளை முட்டைக்கும் பழுப்பு நிற முட்டைக்கும் ஊட்டச்சத்துக்களில் வேறுபாடு உள்ளதா? என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
முட்டை ஓட்டின் நிறம் அதன் மரபியல் வெளிப்பாடுதான். அது கூடுதல் ஊட்டச்சத்துக்கள் அல்லது உயர் தரத்தைக் குறிக்கவில்லை. பழுப்பு நிற முட்டை அல்லது வெள்ளை நிற முட்டை இரண்டிலும் ஒரே மாதிரியான சத்துக்கள் இருக்கின்றன. புரதம், நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் இரண்டு முட்டையிலும் உண்டு. வெள்ளை முட்டைக்கும் பழுப்பு நிற முட்டைக்கும் ஊட்டச்சத்துக்களில் வேறுபாடு உள்ளதா? என்ற கேள்விக்கான விடை நுட்பமானது.
முட்டை ஓடுகளின் நிறம் கோழியின் மரபியலால் தீர்மானம் செய்யப்படுகிறது. அதற்கும் ஊட்டச்சத்திற்கும் தொடர்பில்லை. ஆனால் இளம்பருவம் அல்லது முதிர்ந்த கோழி, வளர்ப்பு முறை, தீவனம் ஆகியவை ஊட்டச்சத்துக்களில் மாறுபாட்டை உண்டாக்கலாம். இரண்டு முட்டைகளையும் ஒப்பிட்டால் ஊட்டச்சத்து வேறுபாடுகள் மிகவும் குறைவுதான். கிட்டத்தட்ட வேறுபாடுகள் இல்லை எனலாம். ஆய்வுகளும் இதையே சொல்கின்றன.