Knee Pain: மூட்டு வலியால் கஷ்டப்படுறீங்களா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க
மூட்டு வலியால் அவதிப்பட்டு வருபவர்களும், இனி மூட்டு வலி வரக்கூடாது என்று நினைப்பவர்களும் சில உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மூட்டு வலி இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
தற்போதைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கும் மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது. முன்பெல்லாம் மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு உடல்நல கோளாறாக இருந்த நிலையில், தற்போது அனைவருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் மூட்டு வலியை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. உணவுமுறையில் மாற்றத்தை கொண்டு வந்தாலே அது மூட்டு வலி பிரச்சனைகள் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். வீக்கத்தை குறைக்கும் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலியை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இந்த மீன்களில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன. தாவர அடிப்படையிலான ஒமேகா-3 எடுக்க விரும்புவவர்கள் ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை உடல் வீக்கத்தை குறைக்க உதவுவதோடு, மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பழங்கள்
வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது மூட்டு குருத்தெலும்பின் முக்கிய அங்கமான கொலாஜனை உருவாக்க உதவுகிறது. கீரை, முட்டைகோஸ், பிரக்கோலி ஆகிய காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. தக்காளியில் உள்ள லைகோபீன் என்கிற ஆன்டி ஆக்ஸிடென்ட் மூட்டு வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
முழு தானியங்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய்
ஓட்ஸ், பழுப்பு அரிசி, ராகி, கம்பு போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள அலர்ஜி குறைப்பான்களை குறைத்து ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ராசியில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் இது எலும்புகள் மற்றும் மூட்டுகளை பலப்படுத்த உதவுகிறது. கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை, பட்டாணி, பயிறு போன்ற பருப்புகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை வீக்கத்தை குறைத்து தசை மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆலிவ் எண்ணெயில் ஆலியோகாந்தல் என்கிற பொருள் உள்ளது. இது ஸ்டீராய்டு அல்லாத அலர்ஜி எதிர்ப்பு மருந்துகளைப் போல வீக்கத்தை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆலிவ் எண்ணெயை சமையல் அல்லது சாலட் உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள், இஞ்சி, முருங்கைக் கீரை
மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகிய இரண்டும் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட மசாலா பொருட்களாகும் இவற்றில் உள்ள குர்குமின் மற்றும் ஜிங்கரோல்ஸ் ஆகியவை மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும். தினசரி மஞ்சள் மற்றும் இஞ்சியை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் முருங்கைக்கீரையில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் இவை மூட்டுகளை பலப்படுத்த உதவுகிறது. வாரம் இரு முறையாவது முருங்கைக்கீரை சாப்பிடுவது நல்லது. பிரண்டை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த பொருளாகும். பிரண்டையை கஷாயம், துவையல் அல்லது பொடியாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வாரம் ஒரு முறையாவது பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். கால்சியம் எலும்புகளை வலுமையாக்குவதோடு எலும்பு அடர்த்தி குறைபாடுகளை தடுக்கிறது. பால், தயிர், பன்னீர் போன்ற கால்சியம் நிறைந்த பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பாதாம் பால், சோயா பால் போன்றவற்றை தேர்வு செய்யலாம். மூட்டு வலி அதிகம் இருப்பவர்கள் சர்க்கரை மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், மைதா பொருட்கள், வெள்ளை ரொட்டி, பொரித்த அதிக கொழுப்புள்ள உணவுகள், சிவப்பு இறைச்சி, முழு கொழுப்புள்ள பால் பொருட்கள், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள எண்ணெய்களை தவிர்க்க வேண்டும்.
(குறிப்பு: மூட்டு வலிக்கு உணவு முறை என்பது துணை சிகிச்சையே. இது முழுமையான மருத்துவம் அல்ல. தீவிர மூட்டு வலி இருந்தால் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை மற்றும் உணவு பரிந்துரைகளை பெற வேண்டியது அவசியம்)