அதிகம் உப்பு சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கும் காத்திருக்கும் 5 ஆபத்துகள்
உப்பில்லா பண்டம் குப்பையிலே என பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் குப்பை குறைவாக சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியத்தில் பாதிப்பு வராமல் காக்க முடியும். சிலருக்கு அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிட்டால் தான் உணவு சாப்பிட்ட திருப்தியே ஏற்படும். இந்த பழக்கம் உங்களுக்கும் இருக்கு என்றால் இந்த தகவல் கண்டிப்பாக உங்களுக்கானது தான்.

இதயத்திற்கு ஆபத்து :
அதிகப்படியான உப்பு உடலில் சோடியம் அளவை அதிகரிக்கிறது. இது இரத்த நாளங்களில் நீரைத் தக்கவைத்து, இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு இரத்தத்தை பம்ப் செய்ய அதிக அழுத்தம் ஏற்பட்டு நாளடைவில் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பலவிதமான இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக உப்பு உட்கொள்வது இதய தசைகளை நேரடியாக பாதித்து, இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
வயிறு உப்பசம் பிரச்சனை :
அதிக உப்பு உட்கொள்வது வயிறு மற்றும் உடல் முழுவதும் வீக்கம் மற்றும் உப்புசத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, அதிக சோடியம் உள்ள உணவுகளை உட்கொண்ட பிறகு இந்த பிரச்சனையை நீங்கள் உணரலாம். உடலில் அதிகப்படியான சோடியம் இருக்கும்போது, உடலானது அந்த சோடியத்தை நீர்த்துப்போகச் செய்ய அதிக நீரைத் தக்கவைக்க முயற்சிக்கும். இது வயிறு உப்புதல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இரத்த அழுத்த பிரச்சனை :
உயர் இரத்த அழுத்தம், அதிக உப்பு உட்கொள்வதன் நேரடி விளைவுகளில் ஒன்றாகும். சோடியம் இரத்த நாளங்களின் சுவர்களை இறுக்கமாக்கி இரத்தம் சீராகச் செல்வது கடினமாக்கிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் உப்பின் அளவைக் குறைப்பது மிகவும் முக்கியம்.
சிறுநீரக பிரச்சனைகள் :
சிறுநீரகங்கள் உடலில் உள்ள அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகளை வடிகட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் அதிக உப்பை உட்கொள்ளும்போது, சிறுநீரகங்கள் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீண்ட காலமாக இது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, சிறுநீரக நோய்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கும் அதிக உப்பு ஒரு காரணமாக இருக்கலாம்.
தோல் பிரச்சனைகள் :
அதிக உப்பு உட்கொள்வது சருமத்தையும் பாதிக்கலாம். உடலில் நீர் தேக்கம் ஏற்படுவதால், சருமம் வீங்கியும் பொலிவிழந்தும் காணப்படலாம். சில ஆய்வுகள் அதிக உப்பு உட்கொள்வதற்கும் தோல் அழற்சி (Eczema) போன்ற சில தோல் பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறுகின்றன. மேலும், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது சருமம் வறண்டு போகவும் வாய்ப்புள்ளது.