காலை நேர மன அழுத்தத்தை குறைத்து, நாளை சுறுசுறுப்பாக தொடங்க 7 எளிய வழிகள்!
காலைப்பொழுது நன்றாக அமைந்தால் அந்த நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். ஆனால் இன்றைய அவசர உலகில் பலருக்கும் காலை நேரப் பதற்றம் உடல்நலனையும், உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது. மன அழுத்தமின்றி, காலையை எப்படிப் புத்துணர்ச்சியாக மாற்றலாம் எனப் பார்ப்போம்.

15 நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருங்கள் :
வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை விட வெறும் 15 நிமிடங்கள் முன்னதாகவே எழ அலாரம் வையுங்கள். இந்த கூடுதல் 15 நிமிடங்கள் உங்களுக்குள் இருக்கும் அவசர உணர்வைக் குறைத்து, நிதானமாகச் செயல்பட உதவும்.
இதனால் என்ன பயன்?: இந்த கூடுதல் நேரம் உங்களுக்கு ஒரு 'பஃபர்' (Buffer) போலச் செயல்படும். படுக்கையில் இருந்து அவசரமாகக் குதிக்காமல், சில நிமிடங்கள் நிதானமாக படுக்கையிலேயே அமர்ந்து, பிறகு அன்றாட வேலைகளைத் தொடங்கலாம். இது இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவும்.
முதலில் தண்ணீர் குடியுங்கள் :
காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கு முன்பாக பற்களைத் துலக்கிவிட்டு, ஒரு பெரிய கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது சாதாரணத் தண்ணீரைக் குடியுங்கள். இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) தூண்டி, உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும். நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.
லேசான உடற்பயிற்சி அல்லது ஸ்ட்ரெச்சிங் :
காலையில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்றாலும் பரவாயில்லை. படுக்கையை விட்டு எழுந்ததும் உடலை லேசாக நீட்டி நிமிர்த்தும் (Stretching) பயிற்சிகளைச் செய்யுங்கள் அல்லது ஒரு 10 நிமிடங்கள் நிதானமாக நடந்து செல்லுங்கள். இது உடலுக்குள் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தூக்க கலக்கத்தை போக்கும்.
இதனால் என்ன பயன்?: இரவு முழுவதும் ஒரே நிலையில் படுத்திருந்ததால் தசைகளில் இருக்கும் இறுக்கம் குறையும். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, தூக்கக் கலக்கம் உடனடியாக நீங்கி உடல் சுறுசுறுப்படையும்.
நாட்குறிப்பு எழுதுங்கள் :
அன்றைய நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?: ஒரு சிறிய டைரியை எடுத்து, இன்று நீங்கள் முடிக்க வேண்டிய முக்கிய வேலைகளைப் பட்டியலிடுங்கள் (To-Do List). மேலும், மனதில் ஏதேனும் கவலைகள் இருந்தால் அதையும் எழுதி வையுங்கள். உங்கள் எண்ணங்களை காகிதத்தில் வடியுங்கள். இது உங்கள் மூளையின் சுமையைக் குறைத்து, அன்றைய நாளுக்கான தெளிவான திட்டமிடலைத் தரும்.
இனிமையான இசையைக் கேளுங்கள் :
காலை நேரத்தில் சத்தமான ஒலிகளையோ அல்லது மனதை அலைபாய வைக்கும் செய்திகளையோ பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, உங்களுக்குப் பிடித்த மெல்லிசை, புல்லாங்குழல் இசை, அல்லது இயற்கை ஒலிகளை பின்னணியில் ஒலிக்க விடுங்கள். இந்த இனிமையான சூழல், உங்கள் மனதை மிகவும் அமைதியாக வைத்திருக்க உதவும்.
நன்றியுணர்வுடன் தொடங்குங்கள் :
கண்களை மூடி ஒரு 5 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள் (உதாரணமாக: நல்ல குடும்பம், ஆரோக்கியமான உடல், புதியதொரு விடியல்). இந்த "நன்றியுணர்வு" (Gratitude) உங்கள் மனதில் நேர்மறை அதிர்வுகளை (Positive Vibes) உண்டாக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கும்.
நிதானமாக அமர்ந்து காலை உணவு சாப்பிடுங்கள்:
எவ்வளவு வேலை இருந்தாலும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். அவசர அவசரமாக நின்றுகொண்டு சாப்பிடாமல், ஐந்து நிமிடமாவது உணவிற்காக முழுமையாக ஒதுக்குங்கள். டிவி, மொபைல் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை தள்ளி வைத்துவிட்டு, உணவின் சுவையை உணர்ந்து, மென்று சாப்பிடுங்கள். இது செரிமானத்தை சீராக்குவதுடன், உடலுக்குத் தேவையான முழுமையான ஆற்றலையும், திருப்தியையும் தரும்.

