- Home
- உடல்நலம்
- Monsoon Nutrition: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவு தவறுகள்: உணவு நிபுணர்களின் முக்கிய வழிகாட்டல்
Monsoon Nutrition: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவு தவறுகள்: உணவு நிபுணர்களின் முக்கிய வழிகாட்டல்
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவாக வைத்திருக்க சரியான உணவு பழக்கம் மிகவும் அவசியம். அறியாமல் நாம் செய்யும் சில உணவு தவறுகள் செரிமானக் கோளாறுகளையும் நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகளை காண்போம்.

மழைக்கால ஆசைகளுக்கு கட்டுப்படுவது :
மழை பெய்யும்போது மொறுமொறுப்பான, எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடத் தோன்றுவது இயல்புதான். ஆனால், அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள் செரிமானத்தைக் கடினமாக்கி, வயிறு உப்புசம் மற்றும் அஜீரணத்தை உண்டாக்கும்.
தீர்வு: பொரித்த உணவுகளுக்குப் பதிலாக ஆவியில் வேகவைத்த உணவுகள், சூடான சூப் அல்லது வறுத்த தானியங்களைச் சாப்பிடலாம்.
பச்சை உணவுகளை உட்கொள்வது :
மழைக்காலத்தில் பச்சைக் காய்கறிகள், சாலட்கள் மற்றும் நறுக்கி வைத்த பழங்களை அப்படியே சாப்பிடுவது ஆபத்தானது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், பச்சைக் காய்கறிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகள் வேகமாகக் பெருக வாய்ப்புள்ளது.
தீர்வு: காய்கறிகளை நன்றாகக் கழுவி, வேகவைத்து அல்லது சமைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். வெளிக்கடைகளில் விற்கப்படும் வெட்டப்பட்ட பழங்களைத் தவிர்க்கவும்.
நொதித்த உணவுகளைத் தவிர்ப்பது :
பலர் மழைக்காலத்தில் தயிர், மோர் அல்லது நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள் உடலுக்குக் குளிர்ச்சி என நினைத்து முழுமையாகத் தவிர்த்து விடுவார்கள். ஆனால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க இத்தகைய புரோபயாடிக் உணவுகள் மிகவும் அவசியம்.
தீர்வு: மிகவும் குளிர்ந்த நிலையில் தயிர் சாப்பிடாமல், சாதாரண வெப்பநிலையில் உள்ள தயிர், மோர் அல்லது இட்லி, தோசை போன்ற நொதித்த உணவுகளை மிதமான அளவில் உட்கொள்ளலாம்.
அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது :
மழை நேரத்திற்கு இதமாக அடிக்கடி டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், அதிகப்படியான காஃபின் (Caffeine) உடலில் உள்ள நீரிழப்பை (Dehydration) அதிகரித்து, செரிமானத்தைச் சீர்குலைக்கும்.
தீர்வு: டீ, காபிக்கு பதிலாக இஞ்சி டீ, மூலிகை கஷாயம், சுக்கு நீர் அல்லது சூடான எலுமிச்சை-தேன் நீரைக் குடிக்கலாம்.
சீரான உணவில் கவனம் செலுத்தாமல் இருப்பது :
மழைக்காலத்தில் பலரும் நொறுக்குத் தீனிகளை மட்டுமே விரும்பிச் சாப்பிட்டு விட்டு, உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சீரான உணவை (Balanced Diet) மறந்து விடுகிறார்கள். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது.
தீர்வு: தினசரி உணவில் வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள், பருப்பு வகைகள், இஞ்சி மற்றும் பூண்டு போன்ற நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொருட்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

