உடலில் நீர்ச்சத்தை தரும் இந்த பானங்களை வீட்டிலேயே செய்யலாம்
உடலில் நீர்ச்சத்து போதிய அளவில் இருப்பது மிகவும் அவசியம். அதிலும் கோடை காலத்தில் நீர்ச்சத்தை குறையாமல் வைத்துக் கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும். இதற்காக கடைகளில் விற்கும் குளிர்பானங்களை வாங்கி அதிக பணம் செலவு செய்வதை விட வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய நீர்ச்சத்து மிக்க பானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

புத்துணர்ச்சியூட்டும் எலுமிச்சை சாறு :
எலுமிச்சை சாறு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் எளிமையான பானம். ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு எலுமிச்சையின் சாற்றைப் பிழிந்து கொள்ளவும். தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலக்கவும். மேலும் சுவைக்காக சிறிது உப்பு சேர்க்கலாம். இது உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, இழந்த எலெக்ட்ரோலைட்களை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இது வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட்களைக் கொண்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெர்ரி ஸ்மூத்தி :
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்கள் உள்ளன். உங்களுக்குப் பிடித்த பெர்ரிகளுடன் தயிர் அல்லது பால் மற்றும் விருப்பத்திற்கேற்ப தேன் அல்லது வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இந்த ஸ்மூத்தி உடலுக்கு உடனடி ஆற்றலை அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சத்து சர்பத் :
சத்து மாவு என்பது வறுத்த தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் கலவையாகும். இரண்டு தேக்கரண்டி சத்து மாவை ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் கலக்கவும். சிறிது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் வறுத்த சீரகப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். இனிப்பு தேவைப்பட்டால் வெல்லம் சேர்க்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சியையும், நீண்ட நேரத்திற்கு ஆற்றலையும் கொடுக்கும் பாரம்பரிய பானமாகும்.
உடல் குளிர்ச்சிக்கு சாஸ் :
ஒரு கப் தயிரை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கடைந்து கொள்ளவும். இதில் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி உப்பு மற்றும் சிறிது சீரகப் பொடி சேர்த்து கலக்கவும். இது செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கிறது.
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி கூலர் :
தர்பூசணி துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளைச் சேர்க்கலாம். ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும். தர்பூசணியில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், எலெக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.
நச்சுக்களை வெளியேற்றும் கற்றாழை சாறு :
கற்றாழை மடலை வெட்டி, உள்ளே இருக்கும் ஜெல்லை எடுக்கவும். இந்த ஜெல்லை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சுவைக்காக சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்க்கலாம். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நீரேற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த ஐஸ் கிரீன் டீ :
கிரீன் டீயை வழக்கம்போல காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் ஐஸ் கட்டிகள் மற்றும் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து பரிமாறவும். கிரீன் டீயில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் சிறிதளவு எலெக்ட்ரோலைட்கள் இவை உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் அதிகரிக்க உதவுகிறது.
உடல் குளிர்ச்சிக்கு வெள்ளரிக்காய் சாறு :
வெள்ளரிக்காய் துண்டுகளை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். சிறிது உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். புதினா இலைகளையும் சேர்க்கலாம். வெள்ளரிக்காயில் உள்ள் அதிக நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
புத்துணர்ச்சியூட்டும் ஐஸ் காபி :
வழக்கமாக காய்ச்சிய காபியை ஆற வைக்கவும். பின்னர் ஐஸ் கட்டிகள் மற்றும் தேவைப்பட்டால் பால் அல்லது சர்க்கரை சேர்த்து பரிமாறவும். காபியில் சிறிதளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. ஐஸ் சேர்த்து குடிக்கும்போது இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாக இருக்கும்.