ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடந்தால் போதும்.. நோய்களின் ஆபத்தை குறைக்கலாம்.. ஆய்வில் தகவல்..
ஒரு நாளைக்கு 2000 அடிகள் நடப்பது நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய பிசியான வாழ்க்கையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள் ஆகியவை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.
எனவே உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உணவுப் பழக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் தினசரி வழக்கங்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று நடைபயிற்சி.
நடைபயிற்சி உடலுக்கு நன்மை பயக்கும் என்று நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். ஒருவரின் நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கும் எளிதான வழிகளில் நடைப்பயிற்சியும் ஒன்று என்று ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கிறது.. ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு உகந்தவை என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.
walking
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 2,200 அடிகள் நடப்பது, உட்கார்ந்த வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய் அபாயத்தைக் குறைக்கும் திறன் உள்ளது என்பது தெரியவந்துள்ளது..
நீரிழிவு மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் இதில் அடங்கும். அதுமட்டுமின்றி, ஒரு நபர் ஒரு நாளைக்கு 9,000 அடிகள் வரை நடந்தால் சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்றும் ஆய்வு கூறுகிறது.
மசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இயக்கவியல் பேராசிரியரின் கூற்றுப்படி, நடைபயிற்சி செய்யாத நபர் முதலில் நடக்கத் தொடங்க வேண்டும். முதலில் குறுகிய நடைப்பயணத்தை தொடங்கி நாளுக்கு நாள் தூரத்தை அதிகரிக்கலாம். தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்கள் எந்த வேகத்திலும் நடக்கலாம் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, எத்தனை அடிகள் நடக்கிறோ என்பதை எண்ணிக்கொண்டே நடப்பது தொடக்கத்தில் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாளைக்கு 6,000 முதல் 8,000 அடிகள் என்ற இலக்கை நீங்கள் அடைந்தவுடன், எண்ணுவதை விட வேகத்தில் அதிக கவனம் செலுத்தலாம். நடைபயிற்சி செய்வதால் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறும்.
2022 இல் நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, தூக்கத்தில் மூச்சுத்திணறல், அமில ரிஃப்ளக்ஸ், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்க விறுவிறுப்பான நடைபயிற்சி ஒரு பயனுள்ள வழி என்று கண்டறியப்பட்டது.
ஒருவர் வீட்டிலேயே நடக்கத் தொடங்கினாலும், சிறந்த நன்மைகளை பெற வெளியில் நடப்பதையே விரும்ப வேண்டும். இது மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் காரணிகளை சேர்க்கும்.
நடக்கும்போது, உங்கள் நடைப்பயணத்தின் தீவிரத்தை அதிகரிக்க, நீங்கள் ஒரு பையில் சிறிது எடையை எடுத்துச் செல்லலாம். இது இதயத் துடிப்பை அதிகரிக்கும் மற்றும் வலிமை பயிற்சிக்கு உதவும்.