ராஜ தந்திரங்கள் தெரிந்த அரசியல்வாதி... பீகார் முதல்வராக நிதிஷ் குமார் கடந்து வந்த பாதை
பீகாரில் நிலவும் அரசியல் நெருக்கடியை அடுத்து முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
Nitish Kumar
பீகாரில் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஜே.டி.(யு) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குப் பின்னர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து இருந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். பின்னர் பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது. தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆதரவில் ஆட்சி அமைத்து இருந்தார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்து வருகிறார்.
கடந்த 23 ஆண்டுகளாக, பீகார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து, எட்டு முறை பீகார் முதல்வராக பதவி வகித்து தனது அரசியல் திறமையை நிதிஷ்குமார் நிரூபித்துள்ளார். பீகாரில் ஒன்பதாவது முறையாக முதல்வராக பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் தயாராகிவிட்டார். இதைத் தான் அனைத்து ஊடகங்களும் உறுதிபடுத்தி வருகின்றன.
2000 நிதிஷ் குமார் பீகாரின் முதல்வரானார்:
கடந்த 2000-ல், மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதிஷ் குமார் முதல் முறையாக பீகார் முதல்வரானார். இருந்தாலும், சிறுபான்மை அரசாக இருந்த நிலையில் பதவியேற்ற ஒரே வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சமயத்தில் தான் பீகாரில் இருந்து ஜார்கண்ட் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது 324 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தேசிய ஜனநாயக கூட்டணி 151 எம்எல்ஏக்களை கொண்டு இருந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 159 எம்எல்ஏக்களை வைத்திருந்தது.
நிதிஷ் குமார் 2வது பதவிக்காலம் 2005-2010:
2005-ல் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வானார். இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து பெயர் பெற்றார். இதன் பலனாக மீண்டும் 2010ஆம் ஆண்டு தேர்தலில் 141 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில் வெற்றி பெற்றார். இதற்குக் காரணம் அவரது சிறந்த செயல்பாடு என்று கூறப்பட்டது.
பிரதமராக நினைத்த நிதிஷ் குமார்:
2014 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு செய்தது. அப்போது தானும் போட்டியிட நிதிஷ் குமார் நினைத்து இருந்தார். மேலும், மோடியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். 2002 கோத்ரா சம்பவம் மோடிக்கு எதிராக தோல்வியைக் கொடுக்கும் என்று நிதிஷ் குமார் நினைத்தார். ஆனால், மோடி பெரிய அளவில் வெற்றி பெற்றார். இதனால், முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். 2014ல் ஜித்தன் ராம் மஞ்சியை முதல்வராக்கினார். ஆனால் 9 மாதங்களுக்குள் ஜித்தன் ராம் மஞ்சியை ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தி நான்காவது முறையாக நிதிஷ் குமார் முதல்வரானார்.
இதையும் படியுங்கள்... இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்.? முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? நிதிஷ்குமார் விளக்கம்
2015: ஆர்ஜேபி, காங்கிரசுடன் நிதிஷ்:
2015 சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து பாஜக கூட்டணியை நிதிஷ் குமார் தோற்கடித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 80 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 69 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்தநிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் விட்டுக் கொடுத்ததால், பீகார் மாநிலத்தில் 5வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார்.
கூட்டணியை முறித்த நிதிஷ் குமார்:
2017-ல் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை குமார் முறித்துக்கொண்டார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது ஐஆர்சிடிசி நில ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சியில் அமர்ந்தார். அப்போது பீகார் சட்டசபையில் பாஜகவுக்கு 59 இடங்கள் மட்டுமே இருந்தன. 6வது முறையாக முதல்வரானார் நிதிஷ்குமார்.
2020 சட்டசபை தேர்தல்:
2020 சட்டசபை தேர்தலில் பாஜக, சித்தன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் விஐபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் நிதிஷ்குமார் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஏழாவது முறையாக முதல்வரானார் நிதிஷ் குமார்.
2022-ல் பாஜகவுடன் கூட்டணி முறிவு:
ஆகஸ்ட் 2022-ல், அவர் பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று பீகார் முதல்வராக 8வது முறையாக பதவியேற்றார். தற்போது மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜகவுடன் இணைவதற்கு நிதிஷ் குமார் தயாராகி விட்டார்.
இதையும் படியுங்கள்... பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பதவியை ராஜினாமா செய்தார்; பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார்!!