இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்.? முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? நிதிஷ்குமார் விளக்கம்
பிகாரில் லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் இன்று காலை கூட்டணியில் இருந்து விலகி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பாஜக ஆதரவுடன் இன்று மாலை மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜகவிற்கு எதிராக தொடங்கப்பட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அதிர்ச்சி கொடுத்துள்ளார். மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. அதனை முறியடிக்கும் வகையில், எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியில் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை தனக்கு வழங்காத காரணத்தால் நிதிஷ்குமார் அதிருப்தியில் இருந்து வந்தார். இதனையடுத்து பாஜகவோடு மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய நிதிஷ்குமார் இன்று இந்திய கூட்டணி மற்றும் லாலு கட்சி துணையோடு பீகாரில் முதலமைச்சராக இருந்து வந்த பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு தரப்பிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமாறு வந்த கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்துள்ளேன்.எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணிகளை நான் செய்து வந்தேன், ஆனால் மற்றவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து நான் தற்போது விலகி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
அரசியல் சூழல் காரணமாக லாலு கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார். இதனிடையே இன்று மாலை மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்கவுள்ளார். பாஜகவுடன் மீண்டும் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பாட்னா சென்றுள்ளார்.