படமாகும் இசைஞானியின் வாழ்க்கை வரலாறு! இளையராஜாவாக மாறும் தனுஷ்.. படப்பிடிப்பு குறித்து வெளியான அப்டேட்!
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாற உள்ளதாகவும், இதில் ஹீரோவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

70களில் இருந்து தற்போதைய 2கே கிட்ஸ் வரை, தன்னுடைய உன்னதமான இசையால் பல ரசிகர்கள் நெஞ்சங்களை கட்டி போட்டவர் இசைஞானி இளையராஜா. இவரின் இசைக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. லச்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் கூட, இசைஞானியின் இசைக்கு வெறித்தனமான ரசிகர்கள் தான்.
Ilayaraja
இதுவரை இவர் சுமார் 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். அதே போல் 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். சுமார் 20,000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் நிகழ்த்திய உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் இவர் என்கிற பெருமைக்கு உரியவர். குறிப்பாக இளையராஜா 'பஞ்சமுகி' என்று பிரபலமாக அறியப்படும் ஒரு புதிய கர்நாடக ராகத்தை கண்டுபிடித்துள்ளார். இது இசைத்துறையில் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ள இளையராஜா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். அதே போல் இவர் இசையில் செய்த சாதனைகளும் மாயாஜாலங்களும் பல உள்ளன. இவரை பற்றிய வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக கடந்த இரண்டு வருடங்களாகவே சில தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
Dhanush:
இசைஞானியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாகவும், இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவே தயாரித்து, இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.