சூர்யாவின் ரெட்ரோ படம் 235 கோடி வசூல்; உண்மையா? உருட்டா?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ திரைப்படம் ரூ.235 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது.

Retro Movie Box Office Collection
சூர்யாவின் 44வது திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தில் நடிகை ஸ்ரேயா ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருந்தது.
கம்பேக் கொடுத்தாரா சூர்யா?
சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படுதோல்வி அடைந்ததால், ரெட்ரோ படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெட்ரோ படம் அவருக்கு ஒரு தரமான கம்பேக் படமாக அமைந்ததா என்றால் அது கேள்விக்குறி தான். இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கினாலும், வசூல் ரீதியாக முதலுக்கு மோசமின்றி தப்பித்தது. இப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மூன்று வாரங்களை கடந்தும் வெற்றிநடை போட்டு வருகிறது.
ரெட்ரோ வசூல்?
சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் அதன் பின்னர் அப்படக்குழுவிடம் இருந்து பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில், நேற்று ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதன்படி அப்படம் உலகளவில் ரூ.235 கோடி வசூலித்ததாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
235 கோடி வசூலித்ததா ரெட்ரோ?
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகிப்போயினர். இரண்டே வாரத்தில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட ரெட்ரோ படம் எப்படி 235 கோடி வசூலித்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ எக்ஸ் தளத்தில் வருமானத்துறையை டேக் செய்து, சோதனை நடத்துமாரு கூறி வருகின்றனர். ஆனால் ரெட்ரோ படக்குழு சொன்ன வசூல் உண்மை தான். அப்படத்தின் திரையரங்க வசூல் மற்றும் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை என அனைத்தும் சேர்த்து அதன் வசூல் 235 கோடியாம். அதனை குறிப்பிடாமல் மொட்டையாக 235 கோடி வசூல் என குறிப்பிட்டதாக நெட்டிசன்கள் குழப்பம் அடைந்தன. இப்படம் திரையரங்குகளில் 110 கோடி மட்டுமே வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது.