கிறிஸ்டோபர் நோலனுக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் ஆண்டனி... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்கள் இத்தனையா?
கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் முதல் விஜய் ஆண்டனியின் கொலை வரை ஜூலை 21-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
ஓப்பன்ஹெய்மர்
ஹாலிவுட்டில் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது படங்களுக்கென உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடைசியாக இவர் இயக்கத்தில் டெனட் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில், தற்போது ஓப்பன்ஹெய்மர் என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் ஜூலை 21-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இரண்டாம் உலகப்போருக்காக அணுகுண்டு தயாரிக்க உதவிய ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்கிற அமெரிக்க இயற்பியலாளரை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன்.
அநீதி
அங்காடித் தெரு, வெயில், காவியத் தலைவன் போன்ற தலைசிறந்த படைப்புகளை கொடுத்தவர் வசந்த பாலன். அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் அநீதி. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஜூலை 21-ந் தேதி திரைக்கு வருகிறது.
கொலை
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் தான் கொலை. இப்படத்தை பாலாஜி குமார் இயக்கி உள்ளார். கிரைம் திரில்லர் படமான இதில் விஜய் ஆண்டனி உடன் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி செளத்ரி, அர்ஜுன் சிதம்பரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் ஜூலை 21-ந் தேதி திரைகாண உள்ளது.
இதையும் படியுங்கள்... தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள 'LGM' படத்திலிருந்து... இஸ் கிஸ் கிஃபா என்கிற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது!
சத்திய சோதனை
ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் சத்திய சோதனை. இப்படமும் ஜூலை 21-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் பிரேம்ஜி கதையின் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடிக்க, பாக்யலட்சுமி சீரியல் வில்லி ரேஷ்மா பசுபுலேட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காமெடி கதையம்சத்துடன் கூடிய கிராமத்து படமாக இது உருவாகி இருக்கிறது.
இராக்கதன்
தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ள திரைப்படம் தான் இராக்கதன். இப்படமும் வருகிற ஜூலை 21-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ரியாஸ் கான், வம்சி கிருஷ்ணா, நிழல்கள் ரவி, விக்னேஷ் பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மாடலிங் துறையில் நடக்கும் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் படமாக இது அமைந்துள்ளது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
கிஷன் தாஸ் நயகனாக நடித்துள்ள சின்க் என்கிற திரைப்படம் ஜூலை 21-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது. விகாஸ் ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். அதேபோல் வஸந்த் ரவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அஸ்வின்ஸ் திரைப்படமும் ஜூலை 20-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதுதவிர விக்ரம் பிரபு, வாணி போஜன் நடித்த பாயும் ஒளி நீ எனக்கு படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... அட கடவுளே... கார் வாங்கிய 6 மாதத்தில் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி சக்தி! வெளியான அதிர்ச்சி தகவல்!