ரூட்டை மாற்றும் நயன்தாரா! தொடர்ந்து சொதப்பல்... இனி அந்த மாதிரி படங்களுக்கு நோ சொல்ல முடிவு
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா, சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லி வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதும் கிளாமரில் அதிரடியாக களமிறங்கினார். பில்லா, சத்யம், ஏகன், வில்லு போன்ற படங்களில் படு கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதையடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு முன்னுரிமை கொடுத்த நயன்தாரா, அறம், இமைக்கா நொடிகள், மாயா, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து வெற்றிகண்டார். இது மாதிரி படங்களில் நடித்தபோதிலும் இடையிடையே அஜித்துடன் விஸ்வாசம், விஜய் உடன் பிகில், ரஜினியுடன் தர்பார் என கமர்ஷியல் படங்களிலும் நடித்து வந்தார் நயன்.
கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அவர் கதையின் நாயகியாக நடித்த நெற்றிக்கண், ஓ2, கனெக்ட், ஐரா, கொலையுதிர் காலம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தன. இதனால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் நயன்.
இதையும் படியுங்கள்... வாரிசு படத்தின் ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ வெளியீடு!
அதன்படி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ள நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இனி கமர்ஷியல் படங்களில் நயன்தாரா அதிகளவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்கிறார் நயன். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நாங்கெல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க... அஸீமை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த வனிதா - வைரலாகும் போட்டோஸ்