600 படிகளில் சூடம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு... பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சமந்தா
மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நடிகை சமந்தா, நேற்று இரவு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்தாண்டு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதன்காரணமாக 5 மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று இதற்கு சிகிச்சை எடுத்தார் சமந்தா. இறுதியாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்த பின்னர் தான் அவருக்கு நோய் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.
மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 5 மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்த சமந்தா, கடந்த மாதம் தான் மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பினார். தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடித்துள்ள சாகுந்தலம் என்கிற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. குணசேகரன் என்பவர் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, கண்ணீர்மல்க பேசியது காண்போரை நெகிழச் செய்தது. நடிகை சமந்தாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்பது அனைவரும் அறிந்தது. இவர் படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சமந்தா கோவில்களுக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இதையும் படியுங்கள்... குலு குலு படத்தில் கைவைத்த சென்சார் போர்டு... கடுப்பான இயக்குனர் ரத்னகுமார்
தற்போது அதிலிருந்து படிப்படியாக குணமாகி வரும் நிலையில், பழனி மலை முருகன் கோவிலுக்கு சென்று நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று இரவு கோவிலுக்கு வந்த சமந்தா, படிப்பாதை வழியாக சென்று முருகனை தரிசித்துள்ளார். அப்போது 600 படிக்கட்டுகளிலும் சூடம் ஏற்றி நேர்த்திக்கடனை செலுத்தினார் சமந்தா. இதையடுத்து அவருக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. நடிகை சமந்தா பழனிக்கு வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சமந்தா, சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், தற்போது கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனையினாலும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவே பழனி முருகன் கோவிலுக்கு வந்ததாகவும் சமந்தா கூறினார்.
நடிகை சமந்தா உடன் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாரும் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர். நடிகை சமந்தா, பிரேம்குமார் இயக்கத்தில் 96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஜானு என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஜவானில் ‘ரோலெக்ஸ்’ மாதிரி செம்ம மாஸான கேமியோ ரோல்... விஜய் நோ சொன்னதால் பிரபல மாஸ் நடிகரை தட்டிதூக்கிய அட்லீ