அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் தற்போது ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

Tourist Family OTT Release : தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் கிடைத்த ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. சசிகுமார், சிம்ரன் நடிப்பில் புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கிய இப்படம் மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியானது. நகைச்சுவை மற்றும் குடும்பப் படமாக வெளியான இப்படம், முக்கியமான அரசியல் கருத்துகளையும் பேசியது. வெளியாவதற்கு முன்பே பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்ற இப்படம், ரிலீஸ் ஆன பின்னர் முதல் காட்சியிலிருந்தே நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இப்படம் சூர்யாவின் 'ரெட்ரோ' படத்துக்கே வசூலில் டஃப் கொடுத்தது. 'ரெட்ரோ' படத்தின் மொத்த வசூல் 97.33 கோடி ரூபாய் என்றால், 'டூரிஸ்ட் ஃபேமிலி' 86.58 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இருப்பினும் ரெட்ரோவை காட்டிலும் இப்படம் மிகவும் கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இதனால் ரெட்ரோ படத்தைவிட டூரிஸ்ட் பேமிலி படம் மூலம் தயாரிப்பாளருக்கு செம லாபம் கிடைத்தது. அதேபோல் திரையரங்க உரிமையாளர்களும் நல்ல வசூல் பார்த்தனர்.

ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் டூரிஸ்ட் ஃபேமிலி

திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் தற்போது, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், 'ஆவேசம்' படத்தில் பிபின் கதாபாத்திரத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர், சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் மகனாக நடித்துள்ளார். கமலேஷ் ஜெகன் மற்றொரு மகனாக நடித்துள்ளார். இதுதவிர யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ராம்குமார் பிரசன்னா, ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் மொத்த நீளம் 128 நிமிடங்கள். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக லாபம் ஈட்டித்தந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி தான். இப்படம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அதைவிட 500 மடங்கு அதிகம் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது டூரிஸ்ட் ஃபேமிலி.