சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’
நடிகர் சசிகுமார் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’ ஆகிய படங்கள் சசிகுமாருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. தற்போது அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள திரைப்படம் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்திருந்தது. சிம்ரன் கதாநாயகியாகவும், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ரூ.75 கோடி வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கைத் தமிழர்களான சசிகுமார் மற்றும் அவரது குடும்பம் பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைகின்றனர். பின்னர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நகைச்சுவையுடனும், உணர்வுபூர்வமாகவும் இந்த படம் பதிவு செய்திருந்தது. ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம், தற்போது ரூ.75 கோடி வசூலை குவித்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர். படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்த போதிலும், அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படக்குழுவினரை நேரில் வாழ்த்திய சூர்யா
படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த், ராஜமவுலி, சிவகார்த்திகேயன் ஆகியோர் இயக்குனரை பாராட்டியிருந்தனர். சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டி இருந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், “இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால் எனக்குள் ஏதோ ஒன்று குணம் ஆகியது” எனக் கூறியுள்ளார்.
