“மிக அற்புதமான படைப்பு” டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய ராஜமௌலி
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இயக்குனர் ராஜமௌலி இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

வசூலை குவிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜிவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்ஷங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்த படம் மே 1-ம் தேதி உலகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே 12 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. ரூ.60 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ள இந்த திரைப்படம், 20 நாட்களைக் கடந்த போதிலும் ஹவுஸ் ஃபுல்லாகவே திரையிடப்பட்டு வருகிறது.
குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம்
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாக வரும் ஒரு குடும்பம் சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும், அதை அந்த குடும்பம் கையாளும் விதத்தையும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நகைச்சுவையுடன் பேசி இருந்தது. உணர்வுப்பூர்வமாகவும் அதேசமயம் நகைச்சுவையாகவும் இருந்ததால் சமூக வலைதளங்களிலும், திரையரங்குகளிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் போன்ற திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி இருந்தனர்.
"மனதை தொடுகிறது" ராஜமௌலி புகழாரம்
அந்த வரிசையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், “‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்கிற மிக அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். இந்த படம் இதயத்தைத் தொடுகிறது. உணர்வுப்பூர்வமாகவும், அதே சமயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் நிறைந்துள்ளது. அபிஷன் ஜீவிந்தின் சிறந்த எழுத்து மற்றும் இயக்கம் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை ஆர்வத்துடன் என்னை பார்க்க வைத்தது. சமீபத்திய ஆண்டுகளில் மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்தமைக்கு நன்றி. இது தவற விடக் கூடாத திரைப்படம்” எனக் கூறியுள்ளார்.
இன்ப அதிர்ச்சியில் இயக்குனர் அபிஷன்
ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அபிஷன் ஜீவந்த் வெளியிட்டுள்ள பதிவில், “இன்னும் இதை என்னால் நம்ப முடியவில்லை, அவர் இயக்கிய திரைப்படங்களில் மிகப்பெரிய நட்சத்திரங்களை என் கண்களால் பார்த்திருக்கிறேன். அந்த பிரம்மாண்டமான உலகங்களை உருவாக்கியவர் என் பெயரை ஒருநாள் உச்சரிப்பார் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. இந்த சிறுவனின் கனவை வாழ்க்கையை விட பெரிதாக மாற்றி விட்டீர்கள்” என பதிவிட்டு இருக்கிறார்.